மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை தொகுப்பு வினியோகம்


மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 22 April 2020 4:45 AM IST (Updated: 22 April 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை தொகுப்பு வழங்கும் பணியை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

நாமக்கல், 

கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நடவடிக்கையாக பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு 19 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு ரூ.500-க்கு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் மொத்தம் 10 லட்சம் மளிகை தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 880 ரேஷன் கடைகளில் இந்த 19 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 30 ஆயிரம் மளிகை தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பணியை நாமக்கல் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்த மளிகை தொகுப்பில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், புளி, பொட்டு கடலை, நீட்டு மிளகாய், சோம்பு, மஞ்சள் தூள், டீ தூள், உப்பு, பூண்டு, சமையல் எண்ணெய், பட்டை, சோப்பு, மிளகாய் தூள் ஆகிய 19 பொருட்கள் அடங்கி உள்ளது. ஒரு மளிகை தொகுப்பின் விலை ரூ.500 ஆகும். அரசால் மலிவு விலையில் வழங்கப்படும் மளிகை தொகுப்பை பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் வாங்கி பயன்பெறலாம் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது நாமக்கல் சரக துணைபதிவாளர் சி.ரவிச்சந்திரன், பொது வினியோக திட்ட துணை பதிவாளர் டி.ரவிச்சந்திரன், துணை பதிவாளர் (பணியாளர் அலுவலர்) முருகேசன் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story