ஊரடங்கு உத்தரவால் பொம்மைகள் விற்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
ஊரடங்கு உத்தரவால் சேலத்தில் பொம்மைகள் விற்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பல தொழில்கள் முடங்கி லட்சக்கணக்கான தொழிலாளர் கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
சேலம் அருகே உள்ள பூலாவரி சாலையோரத்தில் கூடாரம் அமைத்து ‘சாக்பீஸ்’ மாவால் லட்சுமி, சரஸ்வதி, சாய்பாபா, விநாயகர், யானை, மயில் பொம்மைகள் மற்றும் திருஷ்டி பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பார்ப்பதற்கு அழகாக காணப்படும் இந்த பொம்மைகளை சாலையில் வாகனங் களில் செல்பவர்கள் பலர் வாங்கி செல்கின்றனர்.
இந்த தொழிலில் ஈடுபடும் தொழி லாளர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் கூடாரங்கள் அமைத்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் வியாபாரம் இல்லாததால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து பொம்மைகள் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாங்கள் சுமார் 60 பேர் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு கூடாரம் அமைத்து வசித்து வருகிறோம். சேலம் பூலாவரி சாலையில் சாக்பீஸ் மாவால் பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றோம். நாங்கள் ஒரு அடி முதல் 3 அடி உயரமுள்ள கடவுள் மற்றும் விலங்குகள் பொம்மைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ரூ.500 வரை வியாபாரம் நடைபெறும்.
ஆனால் ஊரடங்கு உத்தரவால் எங்களுடைய வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் மிகவும் தவித்து வருகிறோம். எங்களுக்கு ரேஷன் கார்டு இல்லை என்பதால் அரசு அறிவித்த எந்த சலுகைகளையும் பெற முடியவில்லை. மேலும் தன்னார்வலர்கள் மூலம் பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. வருமானம் இல்லாததால் குழந்தைகளுடன் அவதியுற்று வரும் எங்களுக்கு அரசு உதவ வேண்டும்.என்று அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story