மண்ணடி தங்கும் விடுதியில் இலங்கையைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா


மண்ணடி தங்கும் விடுதியில் இலங்கையைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 April 2020 4:13 AM IST (Updated: 22 April 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

மண்ணடி விடுதியில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதே முக்கிய பங்காக திகழ்கிறது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை மற்றும் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

‘ரேபிட் கிட்’ சோதனை

இந்த நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரேபிட் கிட்’ கருவிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் கொண்டு சென்று, அங்கு இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை, மண்ணடியில் உள்ள தங்கும் விடுதியில் இலங்கையைச் சேர்ந்த 14 பேர், மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் தங்கி இருந்தனர். அவர்களுடன் தங்கும் விடுதியின் மேலாளர் மற்றும் பணியாளர் உள்பட 20 பேர் ஓட்டலில் இருந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது.

உடனடியாக அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன், மற்ற 19 பேரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் நடமாடும் ‘ரேபிட் கிட்’ வாகனம் மூலம் நேற்று எஞ்சியிருந்த 19 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இலங்கையைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு, எஞ்சியவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் தங்கும் விடுதி இருக்கும் பகுதி தகரங்கள் மூலம் அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது.

Next Story