வயல்களில் தேங்கிக்கிடக்கும் வைக்கோல் கட்டுகள் வாகனங்களில் ஏற்றிச்செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு


வயல்களில் தேங்கிக்கிடக்கும் வைக்கோல் கட்டுகள் வாகனங்களில் ஏற்றிச்செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 22 April 2020 4:17 AM IST (Updated: 22 April 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால், வாகனங்களில் ஏற்றிச்செல்ல முடியாமல் வயல்களில் வைக்கோல் கட்டுகள் தேங்கிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

ஊரடங்கால், வாகனங்களில் ஏற்றிச்செல்ல முடியாமல் வயல்களில் வைக்கோல் கட்டுகள் தேங்கிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

சம்பா, தாளடி சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 52 எக்டேரில் சம்பா நெல்லும், 32 ஆயிரத்து 135 எக்டேரில் தாளடி நெல்லும் என மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 187 எக்டேரில் நெல் சாகுபடி நடந்தது. சம்பா, தாளடி அறுவடை பணிகள் முடிந்து தற்போது கோடை நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது பெரும்பாலும் எந்திரங்கள் மூலம்தான் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெறும் போது நெல்லை மட்டும் பிரித்து எடுத்து விட்டு வைக்கோல்கள் அப்படியே வயலில் தேங்கிக்கிடக்கும். ஈரப்பதம் உள்ள வைக்கோல்களை சில நாட்கள் அப்படியே வயலில் காய விடுவார்கள். பின்னர் அந்த வைக்கோல்களையும் எந்திரங்கள் மூலம் சிறிய, சிறிய கட்டுகளாக கட்டுவது வழக்கம்.

வைக்கோல் கட்டுகள்

தஞ்சை மாவட்டத்தில் இருந்து வைக்கோல்கள் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படும். மேலும் தஞ்சை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர், வைக்கோல்களை மொத்தமாக வாங்கி வைப்பது வழக்கம். பின்னர் அவற்றை ஒரு இடத்தில் குவியலாக வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தி வருவார்கள். வைக்கோல் போர் வைப்பதற்காகவே விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு பின்புறம் இடத்தை ஒதுக்கி வைத்து இருப்பார்கள்.

கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் சாகுபடியும் அதிக அளவில் செய்யப்பட்டது. இதனால் வைக்கோல் விற்பனை அவ்வளவாக நடைபெறவில்லை. மேலும் கடந்த ஆண்டு விற்ற விலையை விட இந்த ஆண்டு வைக்கோல் குறைவாகத்தான் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் ஒரு சில வியாபாரிகள், விவசாயிகள் வைக்கோல்களை வாங்கி அவற்றை எந்திரம் மூலம் கட்டுகளாக கட்டி வைத்தனர்.

தேங்கிக்கிடக்கிறது

இந்த கட்டுகள் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வயல்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. லாரிகள் இயக்கப்படாதால் வைக்கோல்களை வாங்கிய வியாபாரிகள், விவசாயிகள் அதனை எடுத்துச்செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

வைக்கோல் கட்டுகளை மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தில் விண்ணப்பித்து வாகன அனுமதி சீட்டு கிடைத்த பின்னர்தான் அவற்றை எடுத்துச்செல்ல முடியும். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்பாததால் வைக்கோல் கட்டுகள் வயல்களில் தேங்கிக்கிடக்கிறது. தஞ்சை கீழவஸ்தாசாவடி, சூரக்கோட்டை, காசவளநாடுபுதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கோல் கட்டுகள் வயல்களில் தேங்கிக்கிடக்கிறது.

விவசாயிகள் தவிப்பு

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, “கடந்த ஆண்டு எல்லா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ததால் நெல் சாகுபடி பணி அனைத்து இடங்களிலும் நடைபெற்றது.

இதனால் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் வைக்கோல் கட்டு விலை வீழ்ச்சி அடைந்தது. விலை வீழ்ச்சி அடைந்தாலும் தற்போது வாங்கிய வைக்கோல் கட்டுகளை ஊரடங்கு காரணமாக எடுத்துச்செல்ல முடியவில்லை. இதனால் வயல்களிலேயே தேங்கிக்கிடக்கிறது” என்றனர்.

Next Story