ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி எச்சரிக்கை


ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 April 2020 11:15 PM GMT (Updated: 21 April 2020 11:15 PM GMT)

ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி, 

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதமாக பட்டாசு ஆலைகள் மூடி கிடக்கிறது. இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில் அரசு சார்பில் நிவாரண நிதியாக தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிசி மூடைகளை, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் வாகனங்களில் ஏற்றி தொழிலாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு, 10 பட்டாசு தொழிலாளர்களுக்கு அரிசி மூடைகளை வழங்கினார். 

இதில் கலெக்டர் கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்(டான்பாமா) தலைவர் கணேசன் பஞ்சுராஜன், இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் (டிப்மா) செயலாளர் கண்ணன், பட்டாசு ஆலை அதிபர்கள் மகேஸ்வரன், ராஜரத்தினம், காளஸ்வரி ஏ.பி.செல்வராஜன், அபிரூபன், ஆசைத்தம்பி, சங்கர், ஜெயராஜ், செல்வசண்முகம், பாஸ்கர்ராஜன், சீனிவாசன், திருமலைராஜன், பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுசெயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. மின்சாரம், குடிநீர் சப்ளையில் எவ்வித பாதிப்பும் இல்லை. இதற்கு முதல்-அமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கையே காரணம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குறிப்பிட்ட சில பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகை விருதுநகர் மாவட்டத்தில் யாரும் விடுபடாத அளவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அச்சகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள்.

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி சிலர் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், பலராமன், கருப்பசாமி, பொன்சக்திவேல், அசன்பதுருதீன், வக்கீல் முத்துப்பாண்டியன், கருப்பசாமிபாண்டியன், செல்லப்பாண்டி, பாபுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story