உத்தவ் தாக்கரே எம்.எல்.சி. ஆக என்ன செய்ய வேண்டும்? - முன்னாள் முதன்மை செயலாளர் கருத்து
உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்ள எம்.எல்.சி. ஆவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து முன்னாள் முதன்மை செயலாளர் கருத்து தெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தான் பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகியும் இன்னும் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ தேர்வாகாமல் இருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி 6 மாதத்துக்குள் ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும். எனவே வருகிற 24-ந் தேதி நடைபெற இருந்த 9 எம்.எல்.சி. பதவிகளுக்கான தேர்தல் மூலம் தனது பதவியை காப்பாற்றி கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த தேர்தல் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இதையடுத்து, கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க கோரி மாநில மந்திரி சபை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது. அரசியலமைப்பின் 171-வது பிரிவின் கீழ் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்த அறிவும், அனுபவமும் உள்ளவர்களை கவர்னர் தனது விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் எம்.எல்.சி.யாக நியமிக்க முடியும். எனவே சட்ட வல்லுனர்களுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆலோசித்தார். ஆயினும் இன்னும் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தை அணுகலாம்
இதனால் உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்வாரா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசாங்கம் அடுத்து என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து மராட்டிய அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் ஆனந்த் கல்சே கூறியதாவது:-
உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக தேர்வு செய்வதற்கு மராட்டிய அரசு இந்திய தேர்தல் ஆணையத்தை மே 27-ந் தேதிக்குள் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. பதவிகளுக்கும் தேர்தல் நடத்த அணுக வேண்டும்.
அல்லது ஏப்ரல் 9-ந் தேதி மந்திரிசபை அளித்த பரிந்துரையின் மீது விரைவில் முடிவெடுக்க கவர்னரை கோரலாம். மேலும் இந்த பிரச்சினையில் மராட்டிய அரசு கவர்னருக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டையும் அணுக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story