வந்தவாசி அருகே ஊரடங்கால் செடியில் அழுகும் சம்பங்கி பூக்கள் - நிவாரணம் வழங்க கோரிக்கை
வந்தவாசி அருகே பயிரிட்டுள்ள சம்பங்கி செடிகளில் பூத்துக்குலுங்கும் பூக்கள், ஊரடங்கால் அறுவடை செய்ய முடியாமல் அழுகி போகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றியம் அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் தனது நிலத்தில் 2 ஏக்கரில் சம்பங்கி செடிகளை பயிரிட்டுள்ளார். அந்தச் செடிகளில் இருந்து தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள் நாள் ஒன்றுக்கு 50 கிலோ பூக்கள் மலரும், அந்தப் பூக்களை அறுவடை செய்ய சில மாதங்கள் ஆகும்.
மீண்டும் பூக்கும் வரை செடிகளை பாதுகாத்து வளர்க்க வேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை 100 கிலோ சம்பங்கி பூக்களை அறுவடை செய்து, விற்பனைக்காக திண்டிவனம் எடுத்துச் சென்று ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்கிறார்.
கொரோனா தொற்று ஊரடங்கால் பூக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் சம்பங்கி பூக்களை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பங்கி பூக்கள் செடிகளிலேயே அழுகி போகிறது. பூக்கள் அழுகி போனால் செடிகளை பூச்சிகள் தாக்கி செடிகள் மடியும் நிலை ஏற்படும்.
அதை தடுக்க பூக்களுடன் செடியின் நடுப்பகுதி வரை வெட்டி எடுத்து, சேடையில் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். சம்பங்கி பூக்களை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாததால் ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு விவசாயி கூறினார்.
இவரை போல், அப்பகுதியில் பல விவசாயிகள் சம்பங்கி செடிகளை பயிரிட்டுள்ளனர். சம்பங்கி செடிகளை பயிரிட்டு, பூத்துக்குலுங்கும் பூக்களை ஊரடங்கால் அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story