குமரியில் இதுவரை 1,023 பேருக்கு கொரோனா பரிசோதனை
குமரியில் இதுவரை 1,023 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 935 பேருக்கு தொற்று இல்லை.
நாகர்கோவில்,
குமரியில் இதுவரை 1,023 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 935 பேருக்கு தொற்று இல்லை. 88 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவில்லை.
பரிசோதனை முடிவுகள்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கேரள மாநிலத்திற்கு வாகனத்தில் செல்ல வேண்டியவர்கள் covid19jagratha.kerala.nic.in என்ற இணையதள முகவரியில் வாகன அனுமதி கோரி கேரள அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைக்கப் பெற்ற பிறகு குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வலைதள முகவரி https:/kanyakumari.nic.in -ல் கேரள மாநில அனுமதியுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் களப்பணியாளர்கள் மூலமாக 1,023 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது. 935 பேருக்கு நோய் தொற்று இல்லை. மீதம் உள்ள 88 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவில்லை.
வழக்குகள் பதிவு
குமரி மாவட்டத்தில் மொத்தம் 340 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் 127 பேர் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள், 213 பேர் நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகும். நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி கடையை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை அடைத்தனர். மேலும் நோய் தொற்றினை முற்றிலுமாக தவிர்க்க கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டம் முழுவதும் கடந்த 27 நாட்களில் இதுவரை 5 ஆயிரத்து 314 வழக்குகளும், 4 ஆயிரத்து 219 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story