திறந்தவெளி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள்


திறந்தவெளி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 April 2020 3:30 AM IST (Updated: 22 April 2020 8:23 AM IST)
t-max-icont-min-icon

திறந்தவெளி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.

ஊட்டி,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கேள்விக்குறியாகியது. இதையடுத்து நோய் பரவலை தடுக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் ஏ.டி.சி. காந்தி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டன.

இம்மாத தொடக்கத்தில் கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் வரிசையில் நின்று அத்தியாவசிய பொருட்களை வாங்க 1 மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் போடப்பட்டது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பழங்கள் போன்ற கடைகள் தினமும் திறந்து இருந்தாலும், பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள திறந்தவெளி சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் இருந்தது. ஏ.டி.சி. பகுதிகளில் இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தி விட்டு, காய்கறிகளை வாங்க சென்றனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக கறிவேப்பிலை, கொத்தமல்லி, பழங்கள் வாங்குவதற்காக ஒரே கடையில் வெகுநேரம் நின்றிருந்தனர். ஒருவர் வாங்கி சென்ற பின்னர் பின்னால் நிற்பவர்கள் வந்து வாங்கி செல்ல வேண்டும், கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால், நோயின் தீவிரத்தை உணராமலும், விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். மற்றொருபுறம் நுழைவுவாயில் பகுதியில் உள்ளே வரும் பொதுமக்கள் கைகளை கழுவி சுத்தப்படுத்த கிருமிநாசினி வைக்கப்பட இல்லை. இதனால் அவர்கள் கைகளை சுத்தப்படுத்தாமல் உள்ளே வந்து செல்கின்றனர். அதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஊட்டியில் சமூக இடைவெளி விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story