கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவது மகிழ்ச்சி: கோவை மாவட்டத்தில் சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது - கலெக்டர் ராஜாமணி பேட்டி
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறினார்.
கோவை,
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு அவர்களை வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நிர்மலா, மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், சுகாதாரத்துறை பணிகள் துறை துணை இயக்குனர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் மாவட்ட கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் 134 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 54 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 11 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 29 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்புகின்றனர். கோவை மாவட்டத்தில் இதுவரை 83 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவது மாவட்ட நிர்வாகத்துக்கும், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மீதமுள்ளவர்களும் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார்கள்.
கோவை மாவட்டத்துக்கு வந்த 2 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டில் ஆயிரம் பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் ஆயிரத்து 200 கருவிகள் தற்போது வந்துள்ளன. நாளை(இன்று) முதல் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுடன் 2-ம் கட்ட தொடர்பில் இருப்பவர்களிடம் வைரஸ் தொற்று குறித்து வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை அலுவலர்கள் பரிசோதிக்க உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கருவி மூலம் சுமார் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தான் 134 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிகப்படியான எண்ணிக்கையில் சோதனை நடத்துவதற்கு தான் ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதித்ததில் 8 பேருக்கு தான் உறுதி என்று தெரியவந்தது. அந்த 8 பேரை தான் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் பரிசோதனை செய்து உறுதி செய்யப்படும். எனவே 100 சதவீதம் பேருக்கு வைரஸ் அறிகுறி இல்லாத மாவட்டம் கோவை மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவரிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட் கிட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, மாநில அரசின் வழிபாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் செயல்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story