பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் எடுத்து மோசடி


பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் எடுத்து மோசடி
x
தினத்தந்தி 22 April 2020 9:33 AM IST (Updated: 22 April 2020 9:33 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். ரகசிய குறியீடு எண்ணை பெற்று பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரம் எடுத்து மற்றொரு பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை, 

ஏ.டி.எம். ரகசிய குறியீடு எண்ணை பெற்று பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரம் எடுத்து மற்றொரு பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ஏ.டி.எம். கார்டு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மாமுண்டிமட வீதியை சேர்ந்த சிவராமனின் மனைவி தமிழ்செல்வி (வயது 36). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக ஒரு பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செல்போனில் தமிழ்செல்வியிடம் பேசியுள்ளார். அப்போது அவரிடம் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க தங்களின் கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிவிக்கும் படி அந்த பெண் கேட்டுள்ளார். இதனை நம்பிய தமிழ்செல்வி தனது வங்கியின் ஏ.டி.எம்.கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணையும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். உடனே எதிர் முனையில் பேசிய பெண் செல் இணைப்பை துண்டித்துவிட்டார்.

ரூ.28 ஆயிரம் மோசடி

இந்த நிலையில் தமிழ்செல்வியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரத்து 907 எடுக்கப்பட்டதாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பெண் பேசிய செல்போன் எண்ணை பல முறை தொடர்பு கொண்டார். ஆனால் பதில் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதைத்தொடர்ந்து வங்கி மேலாளர் பேசுவது போல பேசி விவரங்களை பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி விசாரித்து வருகிறார்.

மணல் கடத்திய 3 பேர் கைது

*மீமிசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் மீமிசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில், டிராக்டரில் மணல் கடத்தி வந்தது அப்பகுதியை சேர்ந்த முருகேசன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*இதேபோல் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் 2 டிராக்டர்களில் மணல் கடத்தி வந்தது இடையாத்திமங்கலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ், பாஸ்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, டிராக்டர்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் நர்சு வாக்குவாதம்

*ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் செல்பவர்களை பிடித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்திய போது அதில் வந்த நர்சு ஒருவர், சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2 டிராக்டர்கள் பறிமுதல்

*காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் முள்ளிப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசார் நிற்பதை பார்த்த டிரைவர்கள் 2 பேரும், டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். பின்னர் போலீசார் டிராக்டர்களை பார்த்த போது, அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து, தப்பியோடிய 2 டிரைவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

தடையை மீறி திறந்த 7 கடைகளுக்கு ‘சீல்’

*அறந்தாங்கி நகராட்சியில் தடை உத்தரவை மீறி திறந்து இருந்த ஒரு ஆட்டோ உதிரிபாக கடை, மூன்று பெட்டிக்கடை, அறந்தாங்கி அக்னி பஜார் பகுதியில் உள்ள 3 ஆட்டு இறைச்சி கடைகளுக்கும் நகராட்சி ஆணையர் முத்துகணேஷ், சுகாதார அலுவலர் சேகர் ஆகியோர் போலீசார் முன்னிலையில் நேற்று ‘சீல்’ வைத்தனர். பின்னர் கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது.

*அறந்தாங்கி அருகே இடையார் பகுதியில், தடையை மீறி வெள்ளாற்று பகுதியில் இருந்து மணல் அள்ளுவதாக அறந்தாங்கி தாசில்தார் சிவக்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இடையார் பகுதியில் தாசில்தார் ஆய்வு செய்த போது, ஒரு இடத்தில் மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குவித்து வைக்கப்பட்ட மணலை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.


Next Story