“பச்சரிசிக்கு உரிய மானியத்தொகையை கொரோனா நிதியில் சேர்த்து விடுங்கள்” பாளையங்கோட்டை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு வலியுறுத்தல்
பாளையங்கோட்டை மிலிட்டரி பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று பாளையங்கோட்டை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை,
“ஊரடங்கால் ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, அந்த பச்சரிசிக்கு உரிய மானியத்தொகையை கொரோனா நிதியில் சேர்த்து விடுங்கள்” என்று பாளையங்கோட்டை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஆலோசனை கூட்டம்
பாளையங்கோட்டை மிலிட்டரி பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று பாளையங்கோட்டை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் பசூல் ரகுமான் தலைமை தாங்கினார். செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் புஹாரி ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர்கள் செய்யது அப்பாஸ், செய்யது இப்ராகிம், நூருல் அமீன், இணை செயலாளர்கள் அப்துல் காதர், முகமது அசன், ஷேக் முகமது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ரம்ஜான் நோன்பு நாட்களில், நோன்பு இருப்பது, நோன்பு திறப்பது குறித்தும், அரசு நோன்புக்காக தருகிற அரிசி தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு அளித்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:-
பச்சரிசி
புனித ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக எங்களது பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் பல ஆண்டுகளாக அரசு மானியத்தில் நோன்பு கஞ்சிக்காக பச்சரிசியை அரசிடம் பெற்று வருகிறோம். தற்போது கொரோனா தொற்று நோய் காரணமாக, அந்த நோய் பரவலை தடுக்கும் வகையில் தடை உத்தரவு அமலில் உள்ளது.
இதுவரை அரசு வழங்கிய அரிசியை பள்ளிவாசல்களில் வைத்து கஞ்சி காய்ச்சி எங்கள் ஜமாத்தை சேர்ந்த மக்களுக்கும், அனைவருக்கும் வழங்கி வந்தோம். இந்த வழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
வினியோகம் செய்யமுடியாத நிலை
தற்போது தடை உத்தரவு அமலில் உள்ளதால், இந்த ஆண்டு எங்களால் பள்ளிவாசல்களில் வைத்து கஞ்சி காய்ச்சுவதற்கு முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் அரசு தரும் அரிசியை எங்களது ஜமாத்துகள், பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை ஏற்படுத்தி வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு தரும் மானிய அரிசியை இந்த ஆண்டு மட்டும் விட்டுத்தருவது என்று எங்களது அமைப்பை சார்ந்த ஜமாத்துகள் சார்பில் முடிவு செய்து உள்ளோம்.
எங்களுக்கு வழங்கப்பட உள்ள பச்சரிசிக்கு உரிய மானியத்தொகையை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதி ஆதாரத்துக்கு சேர்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். வழக்கம்போல் மானிய அரிசி வழங்க ஆணை வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story