திண்டிவனம் அருகே, பலாப்பழம் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது - பெண் உள்பட 3 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே பலாப்பழம் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம், பெயர் பலகை மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
மயிலம்,
கண்டாச்சிபுரம் அருகே உள்ள சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். டிரைவர். இவர் தனது சரக்கு வாகனத்தில் பலாப்பழங்களை ஏற்றிக்கொண்டு கண்டாச்சிபுரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி புறப்பட்டார். அப்போது அவருடன், அவரது உறவினர்களான பாண்டியன், லலிதா ஆகியோரும் சென்றனர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே கன்னிகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலையில் சென்றது. அப்போது பின்னால் வந்த கார், எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பெயர் பலகை மீது மோதியது. இதில் அந்த சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் இருந்த பலாப்பழங்கள் அனைத்தும் சாலையில் உருண்டோடின.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த மணிகண்டன், பாண்டியன், லலிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் மீட்கப்பட்டது. சாலையில் சிதறிக்கிடந்த பலாப்பழங்கள், மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story