தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்


தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 April 2020 10:30 PM GMT (Updated: 22 April 2020 6:03 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தானாக முன்வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தென்காசி, 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே தென்காசி மாவட்ட பொதுமக்கள் அரசின் உத்தரவை மதித்து வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து கொரோனா பரவுவதை தடுக்க ஒத்துழைக்கவேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் காய்ச்சல் அறிகுறி கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

 காய்ச்சல், சளி, தும்மல், இரும்மல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீடு தேடி வருகின்ற ஊழியர்களிடம் மறைக்காமல் தெரிவிக்கவேண்டும். அப்படி அறிகுறி இருந்தால் பொதுமக்கள் தானாக முன்வந்து உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். கொரோனா வைரஸ் தாக்குலில் இருந்து தற்காத்து கொள்ள உடனே இந்த பரிசோதனையை பொதுமக்கள் செய்யவேண்டும். மேலும் டாக்டர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவேண்டும்.

டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் தாங்களாகவே மருந்துகடைகளில் நோய்களுக்கு மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். முககவசம் அணியால் வெளியே செல்லக்கூடாது. வீட்டை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். திறந்த வெளியில் மல ஜலங்கள் கழிக்காதிருந்தால் மட்டுமே கொரோனா தொற்றை முழுமையாக தடுக்க இயலும்.

வீட்டிலும், வெளியிலும், சேவை பார்க்கும் இடத்திலும் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும். தன்னலம் மறந்து பணியாற்றிக்கொண்டு இருக்கும் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story