கிருஷ்ணகிரி: சாலைகளில் இயல்பாக நடமாடும் பொதுமக்கள்; சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் சாலைகளில் இயல்பாக நடமாடுவதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி,
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலைகளில் தேவையின்றி நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள சேலம் சாலை, பெங்களூரு சாலை மற்றும் முக்கிய சாலைகளில் காலை நேரத்தில் வழக்கம் போல் கூடும் பொதுமக்கள் எந்தவித சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் காய்கறிகள் வாங்குதல், மளிகை கடைகளில் பொருட்களை வாங்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊர்களிலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினார்கள். தேவையின்றி சாலைகளில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story