சேந்தமங்கலம் அருகே கொரோனா பாதித்தவர் வந்து சென்ற 2 தெருக்களுக்கு ‘சீல்’
சேந்தமங்கலம் அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வந்து சென்ற 2 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் 2 மருந்து கடைகளை மூடவும் கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி மேற்கு வீதியை சேர்ந்த ஒருவரின் உறவினரான 32 வயதுடைய இன்சூரன்ஸ் அலுவலருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதியானது. முன்னதாக அவர் காளப்பநாயக்கன்பட்டிக்கு வந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் அந்த பகுதியில் கிருமி நாசினி வீடு, வீடாக தெளிக்கப்பட்டது. அங்கு வசித்து வருபவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக அங்கு 2 தெருக்கள் உடனடியாக மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதையடுத்து அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியே செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பால், காய்கறிகள், அரிசி, சமையல் பொருட்கள் போன்றவற்றை பேரூராட்சி பணியாளர்கள் வாகனத்தில் கொண்டு சென்று வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள மருந்து கடை ஒன்றிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலுடன் சென்று உள்ளார். அப்போது கடை உரிமையாளர் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தன்னிச்சையாக மாத்திரை கொடுத்து உள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த தகவல் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் மெகராஜ், அந்த மருந்து கடை உள்பட 2 மருந்து கடைகளுக்கு ‘சீல்‘ வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார் முன்னிலையில் நேற்று மருந்து கடைகளுக்கு வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சென்று வந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலை மூடப்பட்டதால் அப்பகுதியில் வழக்கமாக இயங்கி வந்த காய்கறி கடை, மருந்து கடை, பலசரக்கு கடை அனைத்தும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story