அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா - மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை 50-ஆனது
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் பணியாளர்கள் உள்பட 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆனது.
மதுரை,
மதுரையை பொறுத்தமட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு வார்டு உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் 27 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.
2 தினங்களாக மதுரையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் ஒருவர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர். மற்றொருவர் 68 வயதுடைய வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் வெளியூர் சென்று வந்ததாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவருகிறது. அதன் மூலம் இவர்கள் 2 பேருக்கும் தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் அவர்கள் சென்று வந்த இடங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதுபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மதுரை ராஜாக்கூர் மற்றும் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஏற்கனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, மருத்துவ பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவர்கள் 4 பேரையும் சேர்த்து, மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆனது.
இதற்கிடையே மதுரை கள்ளந்திரி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து நேற்று பூரண குணமடைந்ததைத் தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் 15 நாட்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். இதனால் குணமானவர்கள் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story