உசிலம்பட்டியில் அம்மா உணவகத்தில் 3 வேளை இலவச உணவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு
உசிலம்பட்டி அம்மா உணவகத்தில் 3 வேளை இலவச உணவு வழங்குவதை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மற்றும் பொதுமக்களுக்காக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் அம்மா உணவகத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து உணவகத்தில் வழங்கப்படும் உணவை ருசி பார்த்தார். தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூமா.ராஜா வரவேற்றார். இதில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரை.தனராஜன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் செல்வக்குமார், போத்தம்பட்டி ஊராட்சி தலைவர் உக்கிரபாண்டி, முன்னாள் நகர் செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்தாய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. ஆர்.டி.ஓ. ராஜ்குமார் வரவேற்று பேசினார். நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி, போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், அத்துடன் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதில் யூனியன் ஆணையாளர்கள் ராமர், கண்ணன், கீதா, சரஸ்வதி, ஜெயராமன், எழுமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, தாசில்தார் செந்தாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென் மாவட்டங்களுக்கு உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பல்வேறு வர்த்தக சங்கங்கள், அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கீழமாசி வீதியில் உள்ள மொத்த பல சரக்கு கடைகள், கச்சாத்து பல சரக்கு கடைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் கடைகளை ஆய்வு செய்தார். அதில் கலெக்டர் வினய், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறுகையில், “தென் மாவட்ட மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மதுரையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் 41 இடங்களில் காய்கறி சந்தைகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் வெளியே சென்று புத்தகம் வாங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இல்லை என்பதை உறுதியாக கூற முடியும்” என்றார்.
Related Tags :
Next Story