கூடுவாஞ்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு ‘சீல்’


கூடுவாஞ்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 22 April 2020 10:30 PM GMT (Updated: 22 April 2020 10:04 PM GMT)

கூடுவாஞ்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உதயம் ஜவுளிக்கடை, உதயம் சூப்பர் மார்க்கெட், ஷரிபா பாத்திரக்கடை ஆகியவை உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை உதயம் சூப்பர் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக பொதுமக்கள் மளிகை பொருட்களை வாங்குவதாகவும், அதே கடைக்குள் உள்ள பாத்திரக்கடை, துணி கடையில் வியாபாரம் நடைபெறுவதாகவும் வண்டலூர் தாசில்தாருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, வண்டலூர் தாசில்தார் செந்தில் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்தார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய பொருட்கள் அல்லாத சில்வர் பாத்திரங்கள் மற்றும் துணிகளை விற்பனை செய்த காரணத்தினால் ஒரே வளாகத்தில் இயங்கிய 3 கடைகளுக்கும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் முன்னிலையில் தாசில்தார் சீல் வைத்தார். 

மேலும் கூடுவாஞ்சேரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய முடிதிருத்தும் கடைகளுக்கு எச்சரிக்கை செய்த அவர், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story