கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்படும் அ.தி.மு.க. அரசு மீது களங்கம் கற்பிக்க ஸ்டாலின் துடியாய் துடிக்கிறார் அமைச்சர் காமராஜ் பேட்டி


கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்படும் அ.தி.மு.க. அரசு மீது களங்கம் கற்பிக்க ஸ்டாலின் துடியாய் துடிக்கிறார் அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 23 April 2020 3:45 AM IST (Updated: 23 April 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்படும் தமிழக அரசு மீது களங்கம் கற்பிக்க ஸ்டாலின் துடியாய் துடிக்கிறார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

கூத்தாநல்லூர், 

கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்படும் தமிழக அரசு மீது களங்கம் கற்பிக்க ஸ்டாலின் துடியாய் துடிக்கிறார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

நிவாரண உதவிகள்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கூத்தாநல்லூர் நகராட்சியில் நடந்தது. மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, தாசில்தார் தெய்வநாயகி, நகராட்சி ஆணையர் லதா, அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர் அகமது, துணை செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கி, கூத்தாநல்லூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 70 பேருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஸ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், அ.தி.மு.க. நகர பொருளாளர் பாஸ்கரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசியல் செய்ய வேண்டாம்

கொரோனா பாதிப்பு தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு அடைந்த 28 பேரில் 8 பேர் குணம் அடைந்து விட்டனர். அம்மா உணவகத்தில் அரசியல் செய்வதாக ஸ்டாலின் பேசி வருகிறார். அனைத்து அண்டை நாடுகளும் போற்றும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை ஏற்படுத்தினார்.

இதனால் நாடு முழுவதும் எண்ணற்ற ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அம்மா உணவகத்தில் அரசியல் செய்வதாக ஸ்டாலின் கூறுவது வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. கொரோனா பாதிப்பில் நாடு இருக்கும்போது ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி போன்றவர்கள் அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள...

கொரோனா ஊரடங்கின் காரணமாக திருவாரூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர் மருத்துவக்கல்லூரி, திருத்துறைப்பூண்டி ஆகிய 5 இடங்களில் உள்ள அம்மா உணவகத்தில் வருகிற மே 3-ந் தேதி வரை ஏழை, எளிய மக்கள் இலவசமாக சாப்பிடுவதற்கு எந்தவித விளம்பரமும் இல்லாமல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 300 காசோலையாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாங்கள் விளம்பரப்படுத்தவே இல்லை. அம்மா உணவகத்தில் கூட அது போன்ற விளம்பரம் இல்லை. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் ஸ்டாலின் தன்னை விளம்பரம் செய்து கொள்ள இது போன்ற காலத்திலும் அரசியல் செய்வது தேவையற்றது.

களங்கம் கற்பிக்க துடிக்கிறார்

எப்படியாவது அரசின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று ஸ்டாலின் துடியாய் துடிக்கிறார். ஆனால் மக்கள் நலனில் என்றும் அக்கறை கொண்ட அ.தி.மு.க. அரசு கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய உடனே ரேஷன் கார்டு ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று வழங்கியது. ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மக்களின் தேவையான அத்தியா வசிய உதவிகளை அரசு துரிதமாக செயல்படுத்தி வருகிறது. இதனையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் மற்றும் கே.எஸ். அழகிரி போன்றவர்கள் அரசைப்பற்றி குறை கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story