வெறிச்சோடி கிடக்கும் சார்பதிவாளர் அலுவலகங்கள் பத்திரப்பதிவு எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் வேதனை
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வருகை தராததால் திறந்து திறந்து வைக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சீர்காழி,
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வருகை தராததால் திறந்து திறந்து வைக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் வேதனையில் ஆழ்ந்து உள்ள பத்திரப்பதிவு எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கால் பாதிப்பு
கொரோனா வைரளஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம்(மார்ச்) 25-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பாதிப்பை சரி செய்யும் வகையில் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகிறது. இதேபோல் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கும் அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. ஆனால் ஊரடங்கால் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள பத்திரப் பதிவு எழுத்தர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் களுக்கு எந்த உதவியும் அறிவிக்கப்படவில்லை.
வெறிச்சோடி கிடக்கிறது
ஊரடங்கு உத்தரவில் சில விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டதன் மூலம் கடந்த 20-ந் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் போக்குவரத்து இல்லாததால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் யாரும் வருவதில்லை.
ஆன்-லைன் பத்திரப்பதிவு மேற்கொள்ளும்போது பத்திரப்பதிவு எழுத்தர்கள் மூலமாக அவர்களுடைய அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் பத்திரத்தை தட்டச்சு செய்து, டோக்கன் வழங்கப்பட்டு அதன்பின்னரே பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் பதிவுக்கு ஏற்றப்படும். ஆனால் பத்திரப்பதிவு எழுத்தர்கள், அலுவலகத்தை திறந்து செயல்பட எந்தவித அறிவுறுத்தலும் அரசால் தெளிவாக வழங்கப்படவில்லை.
இழப்பீட்டுத்தொகை
இதனால் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டாலும் பத்திரப்பதிவு எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பணிகள் இன்றி வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவு எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நிவாரண தொகையை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்திரப்பதிவு எழுத்தர்கள், கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு ஏற்படும் பட்சத்தில், அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகை மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீர்காழி வட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், பத்திரப்பதிவு எழுத்தர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story