கடலூர் அருகே, கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது
கடலூர் அருகே கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவும் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், ஆங்காங்கே சாராயம் காய்ச்சும் சம்பவம் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்தும் விற்பனை செய்தனர். அங்கும் சாராயம் மற்றும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், குடிபிரியர்கள், ஏற்கனவே சாராயம் காய்ச்சியவர்கள் மீண்டும் அந்த தொழிலை செய்து வருகின்றனர். அவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் எஸ்.புதூர் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சிலர் சாராய ஊறல் போட்டு சாராயத்தை காய்ச்சி விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் முதுநகர் இன்ஸ்பெக்டர் பால் சுதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் 150 லிட்டர் சராயத்தை காய்ச்சி அதை விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார், சாராயத்தை காய்ச்சியதாக அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் தனசேகர் (வயது 36) கோவிந்தராஜ் மகன் தனசேகர் (48), சக்திவேல் (41), சிவமணி(33) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிவகுமார், அருண், ராம்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்கள் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் இது வரை 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 195 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1,267 லிட்டர் சாராய ஊறல், 4,796 லிட்டர் சாராயம், 1,382 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story