மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லை: தையல் தொழிலாளியின் உயிரை பறித்த வறுமை - 2 குழந்தைகளுடன் மாற்றுத்திறனாளி மனைவி தவிப்பு


மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லை: தையல் தொழிலாளியின் உயிரை பறித்த வறுமை - 2 குழந்தைகளுடன் மாற்றுத்திறனாளி மனைவி தவிப்பு
x
தினத்தந்தி 23 April 2020 4:00 AM IST (Updated: 23 April 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லாததால் வறுமையால் தையல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் மாற்றுத்திறனாளி பெண் தவித்து வருகிறார்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி சித்திரைசாவடி இந்திராநகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). தையல் தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா(27). நிர்மலா இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கிஷோர்(8), கமலேஷ்(5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

மனைவி நிர்மலாவிற்கு துணி துவைத்தல், சமையல் செய்தல் உள்ளிட்ட பணிகளை சண்முகம் செய்துவிட்டு தையல் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சண்முகம் திடீரென நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். அவருக்கு கடுமையான காசநோய் ஏற்பட்டிருந்தது. இதனால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பத்தில் வறுமை தொற்றிக்கொண்டது. யாருடைய உதவியும் கிடைக்காததால், மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்தார் சண்முகம். நிர்மலாவிற்கு ஊனமுற்றோர் உதவித்தொகையும் சரியாக கிடைக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சண்முகத்திற்கு சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சுவாச கோளாறு காரணமாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது டாக்டர்கள், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று கருதி, வீட்டில் தங்கி சிகிச்சை பெற அறிவுரை வழங்கினர். இருப்பினும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று நினைத்தால் அங்கு செல்லவோ அல்லது சிகிச்சை பெறுவதற்கோ அவரிடம் பணம் இல்லை.

என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்த சண்முகம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சண்முகத்தின் உடல் ஊர் மக்களின் பங்களிப்பின் மூலம் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது. ஊனமுற்ற மனைவி, அவரது இரு குழந்தைகளும் இனி எப்படி வாழ்வது என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். உறவுகள் தான் தங்களுக்கு உதவி கரம் நீட்ட முன்வரவில்லை, அரசாவது தங்களுக்கு உதவி கரம் நீட்ட முன்வருவார்களா என்று எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story