சுபநிகழ்ச்சிகள் நடைபெறாததால் லாலாபேட்டை பகுதியில் ஒரு கவுளி வெற்றிலை ரூ.6-க்கு விற்பனை


சுபநிகழ்ச்சிகள் நடைபெறாததால் லாலாபேட்டை பகுதியில் ஒரு கவுளி வெற்றிலை ரூ.6-க்கு விற்பனை
x
தினத்தந்தி 23 April 2020 10:02 AM IST (Updated: 23 April 2020 10:02 AM IST)
t-max-icont-min-icon

சுபநிகழ்ச்சிகள் நடைபெறாததால் லாலாபேட்டை பகுதியில் ஒரு கவுளி வெற்றிலை ரூ.6-க்கு விற்பனையாகிறது. இதனால் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாலாபேட்டை, 

சுபநிகழ்ச்சிகள் நடைபெறாததால் லாலாபேட்டை பகுதியில் ஒரு கவுளி வெற்றிலை ரூ.6-க்கு விற்பனையாகிறது. இதனால் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடை உத்தரவு

கரூர் மாவட்டம், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, கருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். பொதுவாக திருமணங்கள், கோவில் விசேஷங்கள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் மருத்துவ குணமுடைய வெற்றிலை பயன்படுத்துவதால் சளி குறையும், ஜீரணசக்தி உண்டாகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது வெற்றிலை பறிக்கும் பருவத்தில் உள்ளதால், விவசாயிகள் வெற்றிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊரடங்கால் வெற்றிலை பறிக்க ஆள்பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் லாலாபேட்டை மார்க்கெட்டில் ஒரு கவுளி (100 வெற்றிலையை உள்ளடக்கியது) வெற்றிலை ரூ.6-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து உள்ளனர்.

விலை வீழ்ச்சி

இதுகுறித்து வெற்றிலை விவசாயி கூறுகையில், ஒரு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் செலவு செய்து, வெற்றிலை விவசாயம் செய்தோம். தற்போது ஊரடங்கு உத்தரவு உள்ளதால் திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாததால் வெற்றிலை அதிகமாக விற்பனை ஆகவில்லை. அதனால் வெற்றிலையின் விலை குறைந்து விட்டது. தற்போது 100 வெற்றிலையின் விலை ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே கடந்த மாதங்களில் 100 வெற்றிலையின் விலை ரூ.30-க்கு விற்பனை ஆனது. தற்போது அதன் தேவை குறைந்துள்ளதால் ரூ.6-க்கு தான் விற்பனை ஆகிறது. மாயவரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுமதி பெற்ற வாகனத்தில் வெற்றிலையை அனுப்பி வைத்துக் கொண்டு உள்ளோம். அதனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு கேட்டு கொள்கின்றோம், என்றார்.

Next Story