கறம்பக்குடி பகுதியில் ஊரடங்கால் நுங்கு விற்பனை கடும் பாதிப்பு பனைஏறும் தொழிலாளர்கள் தவிப்பு
ஊரடங்கால் கறம்பக்குடி பகுதியில் நுங்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வருமானம் இழந்து பனை ஏறும் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
கறம்பக்குடி,
ஊரடங்கால் கறம்பக்குடி பகுதியில் நுங்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வருமானம் இழந்து பனை ஏறும் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
பனைமரம்
தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று பனைமரம். அந்த மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனை வெல்லம், கற்கண்டு, கருப்பட்டி போன்றவை மருத்துவ குணம் கொண்டவை ஆகும். எவ்வித செலவும் வைக்காமல் தானாகவே வளரும் தன்மை கொண்ட பனை மரங்களில் இருந்து கிடைக்கும் நுங்குகள் கோடை காலங்களில் மக்களின் தாகத்தை தணிப்பதோடு முக பருக்கள், வியர்வை கட்டிகள் முதலான கடும் நோய்களையும் நீக்கும் தன்மை கொண்டவை.
இதனால் கோடை காலம் தொடங்கி விட்டால் நுங்குகளுக்கு நல்ல கிராக்கி ஏற்படுவது வழக்கம். கஜா புயலினால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் மா, பலா, தேக்கு, தென்னை என அனைத்து மரங்களும் சாய்ந்த போதும், தமிழ் கலாசாரம் பெருமை கொண்ட பனை மரங்கள் மட்டும் புயலுக்கு ஈடுகொடுத்து ஓங்கி உயர்ந்து நின்றன.
விற்பனை இன்றி தவிப்பு
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் உள்ள பனைமரங்களில் நுங்குகள் குலை, குலையாய் காய்த்து தொங்குகின்றன. ஆனால் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுங்குகள் பறிக்க படாமல் மரத்திலேயே பழுத்து கீழே கொட்ட தொடங்கி உள்ளன. இதனால் பனை ஏறி நுங்குகளை பறித்து விற்பனை செய்யும் தொழிலாளர்கள் அவர்களின் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஒருசில தொழிலாளர்கள் கிராம பகுதிகளில் உள்ள பனை மரங்களிலிருந்து நுங்குகளை வெட்டி விற்பனைக்காக நகர பகுதிகளுக்கு கொண்டு சென்றாலும் ஊரடங்கால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடப்பதால் கடைவிரித்தேன் கொள்வார் இல்லை என விற்பனை இன்றி தவித்து வருகின்றனர்.
அரசு உதவி செய்ய வேண்டும்
இதுகுறித்து கறம்பக்குடியில் அன்றாட தேவைக்காக குறைந்த அளவிலான நுங்குகளை வெட்டி விற்பனைக்கு கொண்டு வந்திருந்த தொழிலாளி கூறுகையில், மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நுங்கு அறுவடை காலமாகும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நுங்குகளுக்கான தேவையும் அதிகரிக்கும். ஆனால் ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில், நுங்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இழந்து பனை ஏறும் தொழிலாளர்கள் தவித்து வருகிறோம். கறம்பக்குடி பகுதியில் உள்ள தொழிலாளர்கள் எவரும் பனை தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை. ஆகையால் அரசு உதவியும் எங்களுக்கு கிடைப்பதில்லை. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாவது திகைத்து நிற்கிறோம் என கூறினர்.
கோடை காலத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருக்க பனை ஏறி நுங்குகளை தந்த தொழிலாளர்கள், வாழ்க்கை நடத்த இந்த இக்கட்டான தருணத்தில் அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story