மிரட்டுநிலையில் வாலிபருக்கு கொரோனா தொற்று: வீடு, வீடாக மருத்துவ குழுவினர் கண்காணிப்பு
மிரட்டுநிலையில் வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வீடு, வீடாக சென்று மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
அரிமளம்,
மிரட்டுநிலையில் வாலிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வீடு, வீடாக சென்று மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
108 பேருக்கு பரிசோதனை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் மிரட்டுநிலை கிராமத்தில் 23 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டுநிலை சுற்றி உள்ள அரிமளம் பேரூராட்சி பெருங்குடி, ஒணாங்குடி, வன்னியம்பட்டி, கே.புதுப்பட்டி, கடையக்குடி, கீழப்பனையூர், ஆயிங்குடி, கடியாபட்டி, செங்கீரை, ராயவரம், உள்ளிட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த 108 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா தாக்கப்பட்ட இளைஞர் முடி திருத்தம் செய்து கொண்ட கடைகள் கண்டறியப்பட்டு அங்கு பணியாற்றிய இருவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
13 மருத்துவக்குழு
மிரட்டுநிலையில் சுகாதாரத்துறை சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை துணை இயக்குனர் சுகாதார பணிகள் அர்ஜுன்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த நிலையில் மிரட்டுநிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறுகையில், “13 மருத்துவ குழுவினர், 28 மேற்பார்வையாளர்கள் உள்பட 150 பேர் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று யாருக்கும் காய்ச்சல், சளி உள்ளதா? என கண்காணிக்கப்படுகிறது. மேலும் கிருமி நாசினி முழுவதுமாக தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுடைய வாலிபரின் வீடு முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அவர்கள் உடைமைகள், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. கொரோனா அறிகுறி யாருக்காவது ஏற்பட்டால் அவர்களை புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.
Related Tags :
Next Story