கொரோனா சந்தேகம்: கோவை ஆஸ்பத்திரிகளில் 24 பேர் அனுமதி
கோவையில் கொரோனா சந்தேகம் காரணமாக 24 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 134 பேருக்கு கொரோனா இருப்பதால் கோவை 2-வது இடத்தில் உள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டு உள்ளது. மேலும் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் நேற்று யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஏட்டுக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் வசித்து வந்த போலீஸ் குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இன்று (அதாவது நேற்று) ஒரே நாளில் 24 பேர் கொரோனா சந்தேகத்தின் பேரில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 17 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்தனர். எனவே அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 பேர் கோவையையும், ஒருவர் நீலகிரியையும், மற்றொருவர் திருப்பூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story