ஊரடங்கு தளர்வு: திருவிழாபோல் அலைமோதும் மக்கள் கூட்டம் - தொற்று பரவும் அபாயம்
புதுவையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் திருவிழாபோல் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
புதுச்சேரி,
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக 100 நாள் வேலைத்திட்டம், கட்டுமான தொழிலாளர்கள் பணிக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனியார் தொழிற்சாலைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்பி உள்ளனர்.
இதன் காரணமாக காலை வேளைகளில் பணிக்கு செல்லும் விதமாக மக்கள் கூட்டம் நகர பகுதியை நோக்கி படையெடுக்கிறது. அந்த நேரத்தில் மார்க்கெட் பகுதிகளுக்கு காய்கறி வாங்க வருபவர்களும் கிளம்பி வருகின்றனர்.
இதனால் புதுச்சேரி - கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பு, மறைமலை அடிகள் சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகளில் திருவிழாபோல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தெரிகிறது. நெரிசலை தவிர்க்க விரும்பும் சிலர் குறுக்கு சாலைகள் வழியாக புகுந்து வருகின்றனர். அதே சாலை வழியாக ஏராளமானவர்கள் செல்வதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் காலையில் கூடும் கூட்டத்தினால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மக்கள் கூட்டமாக வருவதை தடுக்க போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர், அத்தியாவசிய தேவைக்காக வருபவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுபவர்களும் சாலைகளில் திரிகின்றனர். இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story