ஸ்ரீவைகுண்டம் அருகே, ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி - அண்ணன்-அக்காள் கண் எதிரே பரிதாபம்
ஸ்ரீவைகுண்டம் அருகே அண்ணன்-அக்காள் கண் எதிரே ஊருணியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சாமியாத்து கீழத் தெருவைச் சேர்ந்தவர் சுப்புகுட்டி மகன் கணேசன் (வயது 34). கூலி தொழிலாளியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி தங்க துரைச்சி. இவர்களுக்கு பிரியதர்ஷினி (10) என்ற மகளும், சுந்தர் (7), பிரவீன் (4) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.
அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிரியதர்ஷினி 5-ம் வகுப்பும், சுந்தர் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பிரவீன், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தான். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளிகள், அங்கன்வாடி மையம் மூடப்பட்டது. இதனால் 3 பிள்ளைகளும் வீட்டில் இருந்தனர்.
ஊருணியில் மூழ்கி...
நேற்று காலையில் கணேசன் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது அவர் 3 பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்து சென்றார். அப்போது காட்டுப்பகுதியில் ஒரு ஆடு திடீரென்று காணாமல் போனது. எனவே கணேசன் 3 பிள்ளைகளையும் அங்குள்ள ஊருணி அருகில் அமர வைத்து விட்டு, காணாமல் போன ஆட்டை தேடிச் சென்றார்.
அப்போது சிறுவன் பிரவீன், ஊருணியில் இறங்கி விளையாடினான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் தண்ணீரின் ஆழமான பகுதியில் மூழ்கினான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனுடைய அக்காளும், அண்ணனும் கூச்சலிட்டனர்.
போலீசார் விசாரணை
உடனே கணேசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பிரவீனை பரிசோ தித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அண்ணன்-அக்காள் கண் எதிரே ஊருணியில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story