பெருந்துறை, சீனாபுரம் வாரச்சந்தைகள் முடக்கம்; ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஊரடங்கு உத்தரவால் பெருந்துறை, சீனாபுரம் வாரச்சந்தைகள் முடக்கப்பட்டது. இதனால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தைகளில் மிகப் பெரியது பெருந்துறை வாரச்சந்தையாகும். வாரம்தோறும் சனிக்கிழமை பெருந்துறை வாரச்சந்தையில் நடக்கும் தேங்காய் வியாபாரம் பெயர்பெற்றதாகும். மொத்தம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை தேங்காய்கள் விற்பனையாகும். இதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில், இச்சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனை நடக்கும். இவை மொத்தம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை விலை போகும்.
இதுமட்டுமின்றி இச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சில்லரை வியாபாரம் நடக்கும். இதில் அரிசி, பருப்பு மற்றும் இதர தானிய வகைகள், நாட்டு காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள், மளிகை பொருட்கள், இனிப்பு பலகாரங்கள், பேக்கரி வகைகள், ஆயத்த ஆடைகள், பனியன்கள், சட்டைகள், வேட்டி துண்டுகள், விவசாய கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள், மூங்கில் கட்டில்கள் என அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
அன்று விடுமுறை தினம் என்பதால் பெருந்துறை மற்றும் சிப்காட் பகுதிகளில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பெருந்துறை வாரச்சந்தைக்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஒரு வாரம் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே சமயத்தில் வாங்கி செல்வார்கள். இவர்களால் தான் பெருந்துறை வாரச்சந்தையில் வியாபாரம் இரவு 8 மணி வரை நடக்கிறது. இவ்வாறு இந்த சந்தையில் நடக்கும் சில்லரை வியாபாரம் மட்டும் ரூ.1 கோடியை தாண்டும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின், சிந்து, ஜெர்சி கறவை மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். இந்த மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகள் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை விற்பனை ஆகும்.
ஆனால் கடந்த 5 வாரங்களாக பெருந்துறை, சீனாபுரம் வாரச்சந்தைகள் நடக்கவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. அதனால் இந்த 2 வாரச்சந்தைகளும் இயங்க முடியாமல், முடங்கி போய்விட்டன. இதனால் பெருந்துறை மற்றும் சீனாபுரம் வாரச்சந்தைகளில் கடந்த 5 வாரங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொப்பரை தேங்காய் வியாபாரிகள், மாட்டு வியாபாரிகள், ஆட்டு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பட்ட மக்களும் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர்.
Related Tags :
Next Story