சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா


சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 April 2020 5:00 AM IST (Updated: 24 April 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம், 

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரேநாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக லாரி டிரைவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் உள்பட 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 14 பேர் குணமடைந்ததால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் மேட்டூர் மற்றும் கிச்சிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், கருமந்துறையை சேர்ந்த ஒருவர் மற்றும் தாதகாப்பட்டியை சேர்ந்த தாய், மகன் என 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 51 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 40 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில் நேற்று கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று புதிதாக போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நாமக்கல் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 30 வயது பெண் இடம் பெற்று உள்ளார். இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரின் மனைவி ஆவார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62 வயது முதியவர் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரின் மாமனார் ஆவார்.

இதேபோல் மாணிக்கம்பாளையம் அருகே உள்ள நல்லிபாளையத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் நாமக்கல் அருகே உள்ள கோனூர் தாத்திபாளையத்தை சேர்ந்த 41 வயது லாரி டிரைவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 3 பேர் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், போலீஸ்காரர் கரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 729 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் 11 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலம் சென்று திரும்பிய 2,600 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள எலவடை கிராமத்தை சேர்ந்த 35 வயது லாரி டிரைவர் பல்வேறு ஊர்களுக்கு காய்கறி லாரி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்ககிரியில் இருந்து எலவடைக்கு வந்த அவரை தனிமைப்படுத்தி ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன்முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மாவட்டங்கள் பட்டியலில் தர்மபுரியும் இணைந்தது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட லாரி டிரைவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அந்த லாரி டிரைவரின் குடும்பத்தை சேர்ந்த 13 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி ரத்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். அவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று உள்ளதா? என்பது பரிசோதனை முடிவுகளின்போது தெரியவரும் என மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.


Next Story