ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு - சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளின் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு தங்களை அனுப்பி வைக்க கோரி ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்,
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை, மாம்பாக்கம், ஒரகடம், உள்ளிட்ட சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியில் தங்கி இருந்த 100-க்கும் மேற்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வர்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.
கோரிக்கை
அப்போது அலுவகத்துக்குள் சென்ற அவர்கள் அங்கிருந்த ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீயிடம் ஊரடங்கால் தாங்கள் வேலை இழந்து தவித்து வருவதாகவும், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.
அப்போது ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ கூறுகையில், ‘ஊரடங்கு அமலில் உள்ளதால் மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளது. இந்த சூழலில் உங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாது.
மேலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவு, குடிநீர், உள்ளிட்ட வசதிகளையும் அரசு சார்பில் செய்து தரப்படும்’ என்றார். இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story