ஊரடங்கால் வேலையின்றி வருமானம் இழப்பு: மற்றவர்களை மகிழ்வித்த நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வில் சோகம்


ஊரடங்கால் வேலையின்றி வருமானம் இழப்பு: மற்றவர்களை மகிழ்வித்த நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வில் சோகம்
x
தினத்தந்தி 24 April 2020 4:15 AM IST (Updated: 24 April 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கினால், திருவாரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் நாட்டுப்புற கலைஞர்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

திருவாரூர்,

ஊரடங்கினால், திருவாரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் நாட்டுப்புற கலைஞர்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மற்றவர்களை மகிழ்வித்து வந்த இவர்களது வாழ்வு சோகத்தில் திளைக்கிறது.

வருமானமின்றி தவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கினால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் கலைகளை வளர்க்கும் நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் எந்தவித நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

விழாக்கள் ரத்து

திருவாரூர் மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் கரகாட்டம், நையாண்டி மேளம், காவடி, காளியாட்டம், சிவன் ஆட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் என எண்ணற்ற கலைகளில் தங்களது திறமைகளை காட்டி தங்களுக்கென்று தனி முத்திரை பதித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் நடைபெறும் கோவில் விழாக்கள் மூலம்தான் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இந்த நிலையில் ஊரடங்கினால் கோவில்கள் அனைத்தும் நடை மூடப்பட்டன. கோவில்கள் மூடப்பட்டதால் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாட்டுபுற கலைஞர்கள், நாடக கலைஞர்கள் என அனைத்து கலைஞர்களும் வேலை இழந்து, வருமானமின்றி தவித்து வருகின்றனர். தற்போது வேலை இல்லாததால் இவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

ஆண்டிற்கு 6 மாதங்களே வேலை

இதுகுறித்து திருவாரூர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க தலைவர் டி.கே.கலியமூர்த்தி கூறியதாவது:-

நாங்கள் பரம்பரை பரம்பரையாக நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதனை தொழிலாக பார்க்காமல் கலையாக நினைத்து அதனை வளர்க்க பாடுபட்டு வருகிறோம். ஆண்டிற்கு 6 மாதங்கள் மட்டும் தான் எங்களுக்கு வேலை இருக்கும். அதிலும் கோவில் விழாக்கள் மூலம் அதிக வேலைவாய்ப்பினை பெறுகிறோம்.

மேலும் அரசின் கலை பண்பாட்டுத்துறை மூலமாக வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் வேலைவாய்ப்பினை பெறுகிறோம். தற்போது ஊரடங்கினால் வேலை வாய்ப்பினை இழந்து உள்ளோம். இனி அடுத்த ஆண்டு சித்திரையில் தான் எங்களுக்கு வருவாய் கிடைக்கும். எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் உதவி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்பனை கலைஞர்

கிராமிய நாடக நடன கலைக்குழு ஒப்பனை கலைஞர் டி.கலியமூர்த்தி கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பனை கலைஞராக இருந்து வரும் நான் பல விருதுகள் பெற்றுள்ளேன். நாடகம், நடனம், கிராமிய கலைஞர்கள் அனைவருக்கும் ஒப்பனை செய்வதுடன், அவர்களுக்கு தேவையான கதாபாத்திர உடைகளும் தயாரிக்கிறேன். இதில் கலைஞர்களின் படைப்புகளுக்கு ஏற்ப உடைகள், பொய்க்கால் குதிரை, கரகம் போன்றவைகளும் நாங்களே வடிவமைக்கிறோம். 500 கலைஞர்களுக்கு தேவையான உடைகள் உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாடகத்திற்கு ஏற்ப கதை பாத்திரங்களுக்கு ஒப்பனை செய்வதுடன், நடிப்புகளை கற்று தருகிறோம். தற்போது வீட்டில் தனித்து இருப்பதால் வருமானமின்றி சிரமப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அடையாள அட்டை

நாடக கலைஞர்கள் ஜெயபால், ரவிக்குமார் ஆகியோர் கூறுகையில், இயல், இசை, நாடக கலைஞர்கள் சங்கத்தில் 200 கலைஞர்கள் உள்ளனர். நாங்கள் அரிச்சந்திரா போன்ற நாடகங்கள் நடத்தி வருகிறோம். நாடக கலைஞர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை கிடைக்கவில்லை. இதனால் எந்த உதவிகளையும் பெற முடியாமல் தவித்து வருகின்றோம். எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கலைகளை வளர்த்து வரும் நாட்டுப்புற-நாடக கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள் என திருவாரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் ஊரடங்கினால் வேலை இழந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். மற்றவர்களை தங்களது கலையால் மகிழ்வித்து வந்த இந்த கலைஞர்களின் வாழ்வு சோகத்தில் திளைக்கிறது. தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் இந்த கலைஞர்கள்.

Next Story