கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை மீண்டும் திறப்பு


கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 24 April 2020 4:10 AM IST (Updated: 24 April 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டது.

கூத்தாநல்லூர், 

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டது.

கொரோனா அச்சம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கடந்த 8-ந் தேதி கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். உடனே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அந்த பெண்ணுக்கு கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள், தங்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் தங்களது ரத்தத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரிசோதனை விவரம் வரும் வரை மருத்துவம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்தனர். பின்னர் மருத்துவர்கள், நர்சுகள் அனைவரும் அரசு மருத்துவமனையை கடந்த 15-ந் தேதி மூடி விட்டு சென்றனர்.

மீண்டும் திறப்பு

இதனால் சிகிச்சை பெற முடியாமல் அந்த பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கூத்தாநல்லூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட அமைச்சர் காமராஜ், மூடிக்கிடக்கும் அரசு மருத்துவமனையை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார். அதன்படி மருத்துவமனை முழுவதும் நகராட்சி நிர்வாகத்தால் கிருமி நாசினியால் தூய்மைப்படுத்தப்பட்டு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் அமைச்சருக்கு, அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story