புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார் - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புதுப்பெண்ணின் தந்தை புகார் செய்து உள்ளார்.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள தேர்வாய் கண்டிகை கிராமம் அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த சேகர் (54) என்பவரது மகள் சுனிதா (28) என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுப்பெண் சுனிதா, வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து சுனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கார்த்திக் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுனிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திக் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு சுனிதாவின் உடல் கயிற்றில் இருந்து இறக்கி கீழே கிடத்தப்பட்டு இருந்தது. அவரது தலையில் ரத்த காயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சாவில் சந்தேகம்
இதையடுத்து சுனிதாவின் தந்தை சேகர், பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில் கூறி இருப்பதாவது:
எனது மகள் சுனிதாவை கார்த்திக் என்பவருக்குக் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திருமணம் செய்து கொடுத்தேன். அப்போது தேவையான சீர்வரிசை பொருட்களை கொடுத்தேன். திருமணமான ஒரு மாதத்திலேயே கூடுதலாக வரதட்சணையாக பணம் கேட்டு கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் சுனிதாவை துன்புறுத்தி, எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
பின்னர் சமாதானம் செய்து சுனிதாவை மீண்டும் கார்த்திக் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தோம். ஆனால் அதன்பிறகும் சுனிதாவிடம் கார்த்திக்கும், அவரது குடும்பத்தினரும் அடிக்கடி சண்டை போட்டு வந்து உள்ளனர். எனவே எங்கள் மகள் சாவில் சந்தேகம் உள்ளது. வரதட்சணை கேட்டு எனது மகள் சுனிதாவை கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என சாவில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற பாதிரிவேடு போலீசார், சுனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாதிரிவேடு போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுனிதாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story