ராஜபாளையம் பகுதியில் மாங்காய் விளைச்சல் பாதிப்பு - விவசாயிகள் ஏமாற்றம்
ராஜபாளையம் பகுதியில் இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம், செண்பகத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம், கான்சாபுரம், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் எக்டர் பரப்பளவில் மா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் மாங்காய்கள் பறிக்கப்பட்டு வியாபாரத்திற்கு அனுப்பப்படும். இந்த மாதங்களில் மாம்பழம் வரத்து அதிகமாக இருக்கும்.
ஆனால் சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக மா மரங்களில் பூத்திருந்த பூக்கள், மாவடு போன்றவை உதிர ஆரம்பித்தன. பூப்பது எல்லாம் காய்ப்பதில்லை என்பது விவசாயிகளுக்கு தெரிந்திருந்தாலும் உதிர்ந்தது போக மரத்திற்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் காய்கள் காய்க்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.
இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் மா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நல்ல விளைச்சல் இருக்கும் காலகட்டத்தில் ராஜபாளையம் சப்பட்டை, பஞ்சவர்ணம் வகை மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இப்போதைய சூழலில் பறிக்கப்பட்ட மாங்காய்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பவே முடியாத நிலையில் மா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி முத்துபாலராஜா கூறும்போது, மா விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்தி வைக்கும் குளிர்சாதன மையம் அமைக்க வேண்டும், ராஜபாளையத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை ஒன்று ஏற்படுத்த வேண்டும். மா விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் நிறைவேற விரைவில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story