சமூக இடைவெளியை விவசாயிகள் கடைபிடிக்காததால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூடல் - கலெக்டர் நடவடிக்கை


சமூக இடைவெளியை விவசாயிகள் கடைபிடிக்காததால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூடல் - கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 April 2020 4:00 AM IST (Updated: 24 April 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் விற்பனைக்கூடத்தை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் வட்டாரத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் கங்கைகொண்டான், அரசக்குழி, விருத்தாசலம் அரசு மருத்துவமனை, மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் காய்ச்சல், இருமல், தும்மல் ஆகிய நோய்களால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

பின்னர் விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏராளமான விவசாயிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அமர்ந்திருந்தனர். இதைபார்த்த கலெக்டர் அன்புசெல்வன், ஏன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த அளவுக்கு கூட்டம் உள்ளது. கூட்டத்தை குறைப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு அதிகாரிகளை எச்சரித்தார். மேலும் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை மூடவும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூடப்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குள்ளஞ்சாவடி, வடலூர், கெங்கைகொண்டான், அரசக்குழி, மங்கலம்பேட்டை, இருப்பு, மருங்கூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் எந்த காரணத்திற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதையும், கிராம மக்கள் காய்ச்சல், சளி போன்ற காரணத்திற்காக வரும்பட்சத்தில் அவர்களது குடும்பத்தாருக்கும் பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக தான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் கூட்டமாக வரக்கூடாது. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விவசாயிகள் அமர்ந்துள்ளனர். விவசாயிகளின் கூட்டத்தை குறைக்கும் வகையில் இன்றுடன்(நேற்று) ஏலம் முடிவடைந்து விற்பனைக்கூடம் மூடப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை விற்பனைக்கூடம் திறக்கப்படாது. நாளை(அதாவது இன்று) மற்றும் நாளை மறுநாள்(நாளை) ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்படும். மறு உத்தரவு பிறப்பித்தவுடன் டோக்கன் பட்டுவாடா செய்யப்பட்டு விவசாய விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.

மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக கவசம் இல்லாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும். அனைத்து நகராட்சி பகுதிகளிலும் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வரும் இந்த நடைமுறை அமலில் இருக்கும். அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மருத்துவ கட்டுப்பாட்டு அறை 1077 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் தகவலை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் கவியரசு, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, ராஜேஷ், விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எழில், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story