கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஒப்பந்த டாக்டர்களின் சம்பளம் உயர்வு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஒப்பந்த டாக்டர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகத்திற்கு ஊக்கமளிப்பது குறித்து அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, அதை ‘குளுகுளு வசதி’ கொண்ட பதப்படுத்தும் மையங்களில் வைத்து, பிறகு விற்பனை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தக்காளி, பழங்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
உரத்தின் தேவை
குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தரமான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். கொரோனாவை கிராமப்புறங்களில் தடுப்பது குறித்து செயல்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணிகளை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
வெளிநாடுகளில் உரத்தின் தேவை குறைந்துள்ளது என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார். இதனால் அவற்றின் விலை குறையும் என்றும், அதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் சதானந்தகவுடா கூறியுள்ளார். இதுகுறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள்
நகரங்களில் அரசு நிலத்தை பெற்று, தொழில் செய்யாமல் அப்படியே வைத்துள்ளனர். அத்தகைய நிலங்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன். அணைகளில் அதிக நீர் இருப்பு இருந்தால், அதை விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
அணைகளின் நீர் இருப்பு குறித்து அதிகாரிகள் தினமும் சேகரித்து எனக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளேன். கொரோனா காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிடும். அதனால் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவலை அதிகமாக பரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
சம்பள உயர்வு
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பாடம் கற்பிக்கப்படும். ஊரடங்கால் அரசு பஸ் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்களை சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தி அதன் மூலம் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.
தனியார் நிறுவனங்களுக்கு பஸ்களை குத்தகை அடிப்படையில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஒப்பந்த டாக்டர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story