திண்டிவனம் அருகே, திராவகம் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது


திண்டிவனம் அருகே, திராவகம் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 24 April 2020 3:30 AM IST (Updated: 24 April 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே திராவகம் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மயிலம், 

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் இருந்து திராவகம் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு புறப்பட்டது. அந்த லாரியை விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராம எல்லை அருகே அந்த லாரி வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பினார். மேலும் லாரி கவிழ்ந்ததில் டேங்கரில் ஓட்டை ஏற்பட்டு, அதில் இருந்த திராவகம் சாலையோரம் ஆறாக வழிந்தோடியது

இதைப்பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி மயிலம் போலீஸ் நிலையத்துக்கும், லாரி உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான டேங்கர் லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டதோடு, டேங்கரில் ஏற்பட்ட ஓட்டையை தற்காலிகமாக அடைத்தனர்.

இதையடுத்து மாற்று டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளாள டேங்கர் லாரியில் இருந்த திராவகத்தை ஏற்றி அனுப்புவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story