தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தும் சுற்றுலா பயணிகள் இல்லை: பாபநாசம் அகஸ்தியர் அருவி வெறிச்சோடியது


தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தும் சுற்றுலா பயணிகள் இல்லை: பாபநாசம் அகஸ்தியர் அருவி வெறிச்சோடியது
x
தினத்தந்தி 24 April 2020 5:30 AM IST (Updated: 24 April 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

விக்கிரமசிங்கபுரம், 

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்படைய செய்கிறது. மேலும் சில மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு விளங்குகிறது. இந்த ஆறு மலைகளுக்கு நடுவே தவழ்ந்து வரும் இடத்தில் அகஸ்தியர் கோவில் அருகில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

குற்றாலம், மணிமுத்தாறு போன்ற அருவிகள் இருந்தாலும் அங்கு மழை பெய்யும் காலத்தில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால், பாபநாசம் காரையாறு அணையில் இருந்து சீராக திறந்து விடப்படும் தண்ணீரால், அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் தண்ணீர் விழும். இங்கு குளிக்க வருபவர்கள், தண்ணீர் இல்லை என்று திரும்பி சென்றது கிடையாது. இதே போல் பாபநாசத்தில் உள்ள கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் நீராடி பாபவிநாச சுவாமி உலகம்மாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். தங்களது பாவங்கள் போக்க வேண்டி செல்வார்கள்.

சுற்றுலா பயணிகள் இல்லை

பாபநாசம் மற்றும் அகஸ்தியர் அருவி பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து விடுவார்கள். கோடை விடுமுறை காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து இங்கு சுற்றுலா பயணிகள் வந்து நீராடி செல்வார்கள். தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையாக இருந்திருந்தால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல் வார்கள்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வந்து செல்கின்றனர். சுற்றுலா போக்குவரத்து அடியோடு முடங்கி விட்டது. அகஸ்தியர் அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்த போதிலும், சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடக்கிறது. மேலும் பாபநாசம் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கோவில் உள்ளே பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை.

மூடி கிடக்கும் கடைகள்

மேலும் கோவிலின் முன்பும், தெற்கு பகுதியிலும் ஏராளமான வியாபாரிகள் கடை அமைத்து குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், வளையல் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். அவர்களும் பக்தர்கள் வருகை இல்லாததால் தங்களது கடைகளை தார்ப்பாய், பிளாஸ்டிக் பாய்களை கொண்டு மூடி வைத்து உள்ளனர். இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாபநாசம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் நீராடுவது மட்டுமல்லாமல், அகஸ்தியர் அருவிக்கும் சென்று குளித்து மகிழ்வார்கள். இதற்கு பாபநாசம் கோவிலை கடந்து வனத்துறை சோதனை சாவடி வழியாகத்தான் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வேண்டும். இங்கு வனத்துறை ஊழியர்கள் வாகனங்களை சோதனை செய்து பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை கொண்டு செல்ல விடாமல் தடுத்து, அருவிக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால், கொரோனா தடை உத்தரவால் வாகனங்கள் எதுவும் இல்லாமல் வனத்துறை சோதனை சாவடியும் வெறிச்சோடி கிடக்கிறது.

குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் சமீபத்தில் பெய்த மழையால் குறைந்த அளவு தண்ணீர் விழுந்த போதிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இதனால் அருவிக்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. அங்குள்ள வியாபாரிகளும் வியாபாரம் செய்ய முடியாமல் உள்ளனர்.


Next Story