நெல்லை மாவட்டத்தில் பேக்கரி கடைகளை திறக்க அனுமதி கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் பேக்கரி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பேக்கரி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
பேக்கரிகள்
தமிழகத்தில் 144 தடை உத்தரவு காலத்தில் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அவ்வாறு கடைகளை திறந்து விற்பனை செய்யும்போது நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக பேக்கரிகள் மூடி இருந்த காரணத்தால் தங்கள் கடைகளில் உள்ள அலமாரி, பேக்கரி பொருட்கள் வைக்கும் இடம் மற்றும் தயாரிப்பு கூடம், தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்து, அதன்பிறகே தங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தொடங்க வேண்டும்.
மேலும் ஏற்கனவே தயாரித்து விற்பனையாகாமல் இருந்த அனைத்து பொருட்களும் காலாவதியாகி இருக்கும் என்பதால் அவற்றை முறையாக அழித்து விட்டு, புதிதாக தயாரிக்கும் பேக்கரி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
பார்சல்
பேக்கரிகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அங்கேயே அமர்ந்து சாப்பிடுவது, டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் அருந்த அனுமதிக்கக்கூடாது. தடைக்காலம் முடியும் வரை பேக்கரியில் டீ, காபி விற்கக்கூடாது. தங்களது பேக்கரியில் தயாரித்த பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்யும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு துறையால் குறிப்பிட்ட அனைத்து அம்சங்களுடன் கூடிய லேபிள் ஒட்டி, அதன்பிறகே விற்பனை செய்ய வேண்டும். முக்கியமாக தயாரிப்பு தேதி மற்றும் பயன்பாட்டு தேதி ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பணியாளர்கள் முககவசம், கையுறை மற்றும் தலைமுடி கவசம் அணிய வேண்டும். பணியாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு பணியாளரையும் பணிக்கு வரும் முன்பு அவர்களது உடல் நிலையை பரிசோதித்த பிறகே தயாரிப்பு பணிக்கு அனுமதிக்க வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவரை பேக்கரியில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. பேக்கரியின் சுற்றுச்சூழல் மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். உணவு தயாரிக்கும் எந்திரங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். பேக்கரியின் கதவு, கைப்பிடி போன்ற அடிக்கடி தொடும் இடங்களை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
அடையாள அட்டை
பேக்கரியில் பிரட், பன், ரஸ்க் மற்றும் பிஸ்கட் போன்றவற்றுடன் இதர தின்பண்டங்களையும் தயாரித்து விற்பனை செய்யலாம். பேக்கரிகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும். பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனத்துக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story