திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஊரடங்கை மீறி தினமும் திருவிழாதான்... பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஊரடங்கை மீறி தினமும் திருவிழா கூட்டம்போல மக்கள் நடமாடுவதால், கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஊரடங்கை மீறி தினமும் திருவிழா கூட்டம்போல மக்கள் நடமாடுவதால், கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
உரியவர்களிடம் ஒப்படைப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை அத்தியாவசிய தேவைகளான காய்கறி உள்ளிட்ட மளிகை சாமான்கள் வாங்கவும், ஆஸ்பத்திரிக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொய்யான சாக்கு போக்குகள் சொல்லி தேவையின்றி வீதியில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகரை பொறுத்தவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அவை படிப்படியாக உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.
போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
திருச்சி மாநகரில் ஊரடங்கு எப்படி உள்ளது? என்றும், மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் இருக்கிறதா? என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ மற்றும் துணை கமிஷனர் வேதரத்தினம் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்கள் தினமும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனாலும், காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்தால் ஊரடங்கு போல தெரியவில்லை. அந்த அளவுக்கு வாகனங்கள் சாலையில் சீறிப்பாய்ந்து செல்கின்றன. இதனால், அலட்சியமாக செயல்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்களை மைக்கில் அழைத்து அதிகாரிகள் கடுமையாக வசை பாடினர். சரிவர பணிகளை மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
தினமும் திருவிழா...
திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டு விட்டாலும், அதை சுற்றியுள்ள வெல்லமண்டி பகுதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த வியாபார மளிகை கடைகள், அரிசி கடைகள், எண்ணெய் கடைகள் உள்ளிட்டவைகளில் சரக்கு வாங்க தினமும் சாலைகளில் நாலாபுறங்களில் இருந்தும் இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் என சாரை, சாரையாக வந்து கொண்டேதான் உள்ளது.
ஊரடங்கு வேளையில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அங்கு தினமும் திருவிழா கூட்டம்போல காணப்படுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் நெருக்கடியில் சிக்கி போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது.
திணறும் போலீசார்
அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். தற்போது இருசக்கர வாகனங்களை போலீசார் பெரும்பாலும் பறிமுதல் செய்வதில்லை. எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள். வழக்குப்பதிவு செய்து, கைது செய்து உடனடியாக ஜாமீனில் விட்டு விடுகிறார்கள். இதனால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சம் பொதுமக்களிடம் போய் விட்டது.
திருச்சி மாநகரில் தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வலம் வந்தவர்கள், மீன் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் சமூக விலகல் இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றவர்கள், ஆட்டோக்களில் பயணிகளை சவாரி ஏற்றி சென்றதாகவும் திருச்சி கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர், திருச்சி செசன்ஸ் கோர்ட்டு, அரியமங்கலம், கோட்டை, ஸ்ரீரங்கம், உறையூர், தில்லைநகர் மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 96 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், எவ்வித வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்படவில்லை.
Related Tags :
Next Story