ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அம்மிக்கல், ஆட்டு உரல் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை


ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அம்மிக்கல், ஆட்டு உரல் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
x

கரூர் பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அம்மிக்கல், ஆட்டு உரல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், 

கரூர் பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அம்மிக்கல், ஆட்டு உரல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வாதாரம் இழப்பு

கரூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில்கள் பிரசித்தி பெற்று இருந்தாலும், சிறு தொழில்களாக விளங்கும் அம்மிக்கல், ஆட்டு உரல் தயாரிப்பு தொழிலும் சிறப்புற்று விளங்கிய காலமும் உண்டு. முன்பெல்லாம் கிராமங்களில் அம்மிக்கல், ஆட்டு உரல் இல்லாத வீடுகளே இல்லை. தற்போது நாகரிக வளர்ச்சியாலும், வேலைப்பளுவாலும் அம்மிகல், ஆட்டுஉரல் வாங்குவது குறைந்து நவீன இயந்திரங்களை வாங்கி வருகின்றனர். இருப்பினும், கிராமப்பகுதிகளில் புதிதாக திருமணம் ஆகும் தம்பதிகளுக்கு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி தருவதில் அம்மிக்கல், ஆட்டு உரல், வாங்குவதும் ஒன்றாகவே உள்ளது என்றே கூறலாம். தற்போது கொரோனா தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் விதத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில் அவர்களும் வியாபாரம் இன்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர்.

எண்ணிக்கை குறைவு

இது குறித்து தாந்தோணிமலை பகுதியை சேர்ந்த தொழிலாளி கூறுகையில், தங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து இந்த தொழில் செய்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதன் வியாபாரம் நன்றாக இருந்தது. தற்போது நகர்ப் புறப்பகுதிகளில் இதை வாங்குபவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கிராமங்களில் இருந்து மட்டுமே சிலர் வாங்கி வருகிறார்கள். அம்மிக்கல், ஆட்டு உரல் செய்வதற்கு தேவையான கற்களை சத்திரத்தில் உள்ள கிரசரில் இருந்து வாங்கி வருகிறோம். அவ்வாறு வாங்கி வருவதற்கான கூலி, அதனை ஏற்றி இறக்குவதற்கான கூலி, வேன் வாடகை எல்லாம் சேர்த்தால் ஒரு கல்லுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை செலவு ஆகிறது.

கோரிக்கை

ஒரு நாளைக்கு ஒருவர் 1 அம்மிக்கல் மட்டுமே தயார் செய்ய முடியும். ஒரு ஆட்டு உரல் செய்ய 3 நாட்கள் ஆகும். இவ்வாறு தயார் செய்யும் அம்மிக்கல் ரூ.600-க்கும், ஆட்டுஉரல் ரூ.3 ஆயிரத்துக்கும் விற்பனையாகும். மேலும் தற்போது கொரோனா நோய் பரவி வருவதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வியாபாரம் ஏதும் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். இதனால் மத்திய, மாநில அரசுகள் எங்களை போன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Next Story