மூன்றாம் கட்டத்தில் முதலடியை எடுத்து வைத்து விட்டோம் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிற நிலையை கைவிட வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
மூன்றாம் கட்டத்தில் முதலடியை எடுத்து வைத்துவிட்டோம். எனவே, மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிற நிலையை கைவிட வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். 9 பேர் குணமடைந்த நிலையில் திருவண்ணாமலை உள்ள தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களும் விரைவில் வீடு செல்ல உள்ளனர். மீதமுள்ள 2 பேர் மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் செய்யாறு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வீடியோ மூலம் பதிவு செய்து அதனை மக்கள் அறியும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்தார். கடந்த ஒருவாரமாக கலெக்டரின் வீடியோ பதிவுகள் எதுவும் பதிவேற்றம் செய்யப்பட வில்லை.
இந்த நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசியதாவது:-
மகிழ்ச்சியான செய்தியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நான் காத்திருந்தேன். அதற்குள் மீண்டும் சுகாதாரத்துறையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். இந்த வைரசின் 3-ம் நிலையில் ஒரு நபர் கூட பாதிக்கக் கூடாது என்று தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துள்ளது வேதனையாக உள்ளது.
நாம் மூன்றாம் கட்டத்திற்கு செல்வதற்கு உள்ளான முதலடியை எடுத்து வைத்து விட்டோம். இவரின் பணி என்னவென்றால் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேரின் குடும்பத்தை கண்காணிப்பது மற்றும் பரிசோதனை செய்வது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. தற்போது அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரது தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் அவர்களை கண்டுபிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக தான் சமூக இடைவேளியை பின்பற்றுங்கள் என்று தெளிவாக கூறி வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தது போன்று மக்கள் தற்போது இல்லை. சின்ன இடைவெளி கிடைத்தாலும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
நாங்கள் உங்களை வீட்டில் இருங்கள் என்று கூறுவது துன்புறுத்துவதற்காகவும், கஷ்டப்படுத்துவதற்காகவும் இல்லை. நிரந்தரமாக மகிழ்ச்சியாக வைப்பதற்காக தான். இலவசமாக பொருட்கள் கொடுக்கிறேன் என்று சிலர் சொல்வார்கள் அதை விரும்பி யாரையும் உங்கள் கிராமத்திற்குள் தேவையின்றி விடாதீர்கள். நீங்கள் தான் உங்கள் கிராமத்தையும், கிராமத்து மக்களை பாதுகாக்க வேண்டும். வெளியாட்களை உள்ளே வர விடாதீர்கள்.
வருகிற 3-ந் தேதி வரைக்கும் நாம் அனைவரும் கடுமையாக இருந்தால் தான் முழுமையாக விடுபட முடியும். இல்லையென்றால் இந்த நிலை தொடர வாய்ப்பு உள்ளது. முதல் நாளில் எப்படி இருந்தீர்களோ அதேபோல் இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை இருந்தால் தான் இந்த நோயில் இருந்து உங்களை காப்பாற்ற முடியும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மூலம் உங்களுக்கு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிற நிலையை கைவிட வேண்டும். அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் பேசியுள்ளார்.
Related Tags :
Next Story