கோனேரிப்பாளையம், எசனை பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை
கோனேரிப்பாளையம், எசனை பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை எனவும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்,
கோனேரிப்பாளையம், எசனை பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை எனவும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராம பகுதிகளில் விழிப்புணர்வு இல்லை
கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5-ஆக உள்ளது. இதில் ஒருவர் மட்டும் குணமடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கிராமங்களில் வசித்தவர்கள் தான். இந்நிலையில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊரடங்கு உத்தரவும் கிராமங்களில் மீறப்படுகிறது.
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் ஏற்கனவே பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. மேலும் போதிய வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. சில தெருக்களில் வடிகால் இருந்தும் தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. கிராமத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு, தீயிட்டு கொலுத்தப்பட்டு வருகிறது.
கோனேரிப்பாளையம்
மேலும் கோனேரிப்பாளையம் கிராம எல்லையில் உள்ள தனிநபர் இல்ல கழிப்பறைகளும், கோனேரிப்பாளையம் பாரதி நகரில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் ஆகியவை பயன்பாடில்லாமல் போனதால், அதனை சுற்றியுள்ள இடங்கள் இயற்கை உபாதை கழிக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பாரதி நகரில் ஒரு மின்கம்பம் சாய்ந்து பல நாட்கள் ஆகியும், அதனை சரி செய்ய ஊராட்சி நிர்வாகமும், மின்வாரியமும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோனேரிப்பாளையத்தில் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படாததால், கோனேரிப்பாளையம் கிராம மக்கள் முககவசம் அணிவதில்லை. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
எசனை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலும்...
இதேபோல் எசனை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலும் கொரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஊரடங்கிலும் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், கொரோனா குறித்த அச்சம் இல்லாமலும் வழக்கம் போல் சுற்றித்திரிகின்றனர். குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சரிவர அப்புறப்படுத்தாததால் கழிவுநீர் வடிகால்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் எசனை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் வடிகால்கள் தூர்வாரப்படாததால் செல்ல முடியாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூடும் மளிகை கடை, காய்கறி கடை போன்ற இடங்களில், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை. எசனை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறமுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை மறந்தும், முக கவசம் கூட அணியாமல் கூட்டமாக நிற்கின்றனர். சாமியானா பந்தல் கூட போடாததால் வாடிக்கையாளர்கள் வாட்டி வதைக்கும் வெயிலில் காத்து நிற்கிறார்கள். எசனை ஊராட்சியில் பிளச்சிங் பவுடர் போட்டதற்கான அடையாளமே இல்லை. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எசனை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story