வடவள்ளி பகுதியில், கடைகளை வாரத்துக்கு 4 நாட்கள் அடைக்க போலீசார் உத்தரவு


வடவள்ளி பகுதியில், கடைகளை வாரத்துக்கு 4 நாட்கள் அடைக்க போலீசார் உத்தரவு
x
தினத்தந்தி 24 April 2020 12:18 PM IST (Updated: 24 April 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

கோவை வடவள்ளி பகுதியில் கடைகளை வாரத்துக்கு 4 நாட்கள் அடைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

வடவள்ளி,

கோவை மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 இடங்களும், புறநகரில் 8 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவையில் மளிகை, காய்கறி, மெடிக்கல் போன்ற அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற கடைகளை திறக்க அனுமதி கிடையாது. இதே நிலை தான் கோவை மாவட்டம் முழுவதும் நீடிக்கிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் வடவள்ளி பகுதியில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்க வேண்டும். வாரத்தில் மற்ற 4 நாட்கள் கடைகளை அடைக்க போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் வடவள்ளி பகுதியில் வசிப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. அதோடு வடவள்ளி பகுதி வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் இருதயராஜா கூறியதாவது:-

வடவள்ளியில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் கிடையாது. அப்படி இருக்கும் போது அந்த பகுதியில் மட்டும் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவித்திருப்பது ஒருதலைபட்சமானது. வாரத்துக்கு 4 நாட்கள் கடைகளை அடைத்து விட்டு மற்ற 3 நாட்கள் கடைகளை திறந்தால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக தான் இருக்கும். அந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படும்.

சில மாவட்டங்களில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்கிக்கொள்வதற்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு தவறான முன்உதாரணமாகும். அதை போன்ற நிலை வடவள்ளியிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா நாட்களும் கடைகள் திறந்திருந்தால் பொதுமக்கள் தேவைப்படும் போது வந்து பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.

போத்தனூர், சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் எல்லா நாளும் கடைகள் திறந்திருக்கும் போது வடவள்ளியில் மட்டும் வாரத்தில் 4 நாட்கள் கடைகளை அடைக்க சொல்வது புரியாத புதிராக உள்ளது. பீடி, சிகரெட் விற்கிறார்கள் என்று கூறி சிறிய கடைகளை மூடுமாறு போலீசார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதில், கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு மற்ற பகுதிகளில் உள்ளது போல் வடவள்ளியிலும் எல்லா நாட்களிலும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடைகளை வாரத்தில் 4 நாட்கள் மூடிவிட்டு 3 நாட்கள் திறந்தால் கூட்டம் அதிகரிக்குமே தவிர குறையாது. தற்போது மொத்தமாக வாங்கி வைக்கும் அளவுக்கு மக்களிடம் பணவசதி இல்லை. எனவே அன்றாட தேவைக்காக ஒவ்வொரு நாளும் கடைக்கு சென்று பொருட்களை வாங்குகிறார்கள்.

இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை அடைத்தால் மக்கள் அவதிப்படுவார்கள். எனவே தினமும் கடைகளை திறந்து வைக்கவும், கூட்டம் அதிகம் சேராதவாறும் மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்றனர்.

இது குறித்து பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் கூறுகையில், வடவள்ளியில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

எனவே கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக அந்த பகுதி வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் ஒப்புதல் பெற்று தான் வாரத்தில் 4 நாட்கள் கடைகளை அடைக்க சொல்லி உள்ளோம். இதனால் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Next Story