கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் செவிலியர் சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார் - மாவட்ட கலெக்டர் தகவல்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் செவிலியர் சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார் - மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 April 2020 12:18 PM IST (Updated: 24 April 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் செவிலியர் சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 50 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வெளியிடங்களில் இருந்து வந்த கொரோனா அறிகுறி இல்லாதவர்களுடனும், தொடர்பில் இருந்தவர்கள் என 208 பேர் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் சுமார் 50 தொழிற்சாலைகள் பராமரிப்பு உள்பட குறிப்பிட்ட சில பணிகளுக்காக மட்டும் இயங்கி வருகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 39 பேரில் இதுவரை 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 23 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கும் அடுத்த கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகளின்படி டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவக் குழுவினர் முடிவு செய்வார்கள்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் அரக்கோணத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அரக்கோணத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு நேற்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர அந்த செவிலியருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விவரம் சேகரிக்கப்பட உள்ளது.

வாலாஜாவைச் சேர்ந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கு இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வாலாஜா வந்து சென்றுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 15 பேர் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை எனில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கட்டுமானப்பணி உள்பட எந்தவிதமான பணிக்கும் அனுமதி இல்லை.

கட்டுப்பாடுகள் இல்லாத பகுதிகளில் கூட கடைகள் திறந்து வைத்திருப்பதற்கு உரிய நேரம் மேலும் கட்டுப்படுத்தப்பட உள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக இருப்பது குறித்துப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஒழுங்குபடுத்தவும், டோக்கன் முறையில் வாடிக்கையாளர்களின் வங்கிப் பணிகள் மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தவிர கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடமாடும் ஏ.டி.எம். எந்திரங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மாதத் தொடக்க நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நடமாடும் ஏ.டி.எம்.கள் அதிகரிக்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

மாவட்டத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 150 முதல் 200 பேர் வரையிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 80 முதல் 100 பேர் வரையிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Next Story