கொரோனாவை தடுக்க அதிக அக்கறை செலுத்திய மாவட்ட நிர்வாகம் நோய் பரவும் வேகம் குறைகிறது


கொரோனாவை தடுக்க அதிக அக்கறை செலுத்திய மாவட்ட நிர்வாகம் நோய் பரவும் வேகம் குறைகிறது
x
தினத்தந்தி 25 April 2020 4:15 AM IST (Updated: 24 April 2020 10:35 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை தடுப்பதில் அதிக அக்கறை செலுத்திய ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் நோய் பரவும் வேகம் குறைந்து வருகிறது.

ஈரோடு, 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடக்க நிலையில் இந்தியாவே உற்று நோக்கிய மாவட்டம் ஈரோடு. தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 6 பேரில் 2 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதும் ஈரோடு மாவட்டம் பரபரப்பாக மாறியது. சென்னை, காஞ்சீபுரத்துக்கு அடுத்தபடியாக ஈரோடு என்ற பட்டியல் இருந்தாலும் தமிழகத்தில் அனைவரது பார்வையும் ஈரோட்டை நோக்கியே இருந்தது.

2 பேருடன் எண்ணிக்கை முடிந்து விடாமல் தினசரி ஈரோட்டை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருந்தது. 20 பேர் வரை வேகமாக வந்த எண்ணிக்கை ஓரிரு நாட்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இல்லை என்று இருந்தது. ஆனால் அடுத்தடுத்த 70 பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தாய்லாந்து நபர்கள் 3 பேர், அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள், புதுடெல்லி சென்று திரும்பியவர்கள் என்று இந்த பட்டியல் இருந்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கொரோனா தடுப்பு இயக்கத்தை முன்னெடுத்துச்சென்றனர். சுகாதாரப்பணிகள், தூய்மைப்பணிகள், தனிமைப்படுத்தும் பணிகள் என்று ஒவ்வொரு திட்டமும் அரங்கேற்றப்பட்டது.

குறிப்பாக வேறு எங்கும் இல்லாத வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் தலைமையிலான தனிப்படை மிகத்தீவிரமான பணியை மேற்கொண்டது. அது தாய்லாந்து நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட உடனேயே அவர்கள் தொடர்பு உடைய அனைவரையும் தேடிப்பிடித்து அவர்களையும் தனிமைப்படுத்தியதுடன், அவர்கள் வசித்து வந்த பகுதியையும் தனிமைப்படுத்தியதாகும்.

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்தி அறிவித்த பிறகு, மாவட்டத்துக்குள் சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டு வசதிவாரியம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு சற்று வியப்பை அளித்தது. ஆனால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இந்த நடவடிக்கையில் மிகத்தீவிரமாக இருந்தது.

அதுமட்டுமல்ல, புதுடெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வந்த உடனேயே ஈரோடு மாவட்டத்தில் இருந்து புதுடெல்லிக்கு சென்று வந்த அனைவரையும் வீடு வீடாக சென்று போலீசார் அழைத்து வந்து, அவர்கள் ஒத்துழைப்புடன் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது சமூகப்பரவலை கட்டுப்படுத்த மிகப்பெரிய உதவியாக அமைந்தது.

அதற்கு பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்பதால், அவர்கள் சார்ந்த பகுதியையும் தனிமைப்படுத்துவது எளிதானது. ஈரோடு மாவட்டத்தில் 18 இடங்களில் 32 ஆயிரத்து 435 குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரத்து 135 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். சுமார் 1000 பேர் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து கொரோனா பரிசோதனை செய்த மொத்த நபர்கள் 1,258 பேர். இதில் 70 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 4 பேர் கோவையிலும், ஒருவர் திருச்சியிலும் சிகிச்சை பெற்றவர்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்து நேரடியாக கண்டறியப்பட்டவர்கள் 65 பேராக இருந்தது.

பொது இடங்களில் மக்கள் கூடாமல் இருக்க சந்தைகள் மாற்றம் செய்தது. சாலைகள் அடைக்கப்பட்டது. வீதிகளுக்கே காய்கறிகள் வர ஏற்பாடு செய்தது என்று பல வி‌ஷயங்கள் தினசரி நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டன. ஈரோடு மாநகரத்தின் அனைத்து முக்கிய ரோடுகளிலும் கிருமி நாசினி தெளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமின்றி தூய்மைப்பணியாளர்களும் களத்தில் இருந்தனர்.

சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான டாக்டர்கள், செவிலியர்கள் மிகுந்த அக்கறையுடன் தங்கள் பணியை மேற்கொண்டனர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிறப்பு பணிக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்று அரசு டாக்டர்கள் தீவிர பணியாற்றினார்கள். நடுவே கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி மேலும் தொடராமல் டாக்டர்களும் செவிலியர்களும் தீவிரமாக உழைத்தனர். இந்த அக்கறை காரணமாக ஈரோட்டில் குறிப்பிட்ட நாட்களில் கொரோனாவில் இருந்து பலரும் குணம் அடைந்தனர். இது மாவட்ட நிர்வாகத்துக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

ஈரோட்டில் கொரோனா வந்தபோது ஏற்படுத்திய பரபரப்பு இப்போதும் ஏற்பட்டு இருக்கிறது. அது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஈரோடு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள். மற்ற மாவட்டங்களும் இதனை பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகின்றன. மாவட்ட எல்லைகளில் கடந்து சென்று வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து விசாரணை நடத்தும் ஈரோடு மாவட்ட போலீசார் மற்றும் சுகாதார துறையினரின் பணியும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி கொரோனா பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் தங்கள் வீடுகளுக்கே செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். 

Next Story