திருப்பூர் மாநகரில் 3 நாட்கள் முழு ஊரடங்கு: காய்கறி, இறைச்சி, மீன் வாங்குவது எப்படி? - கலெக்டர் அறிவிப்பு


திருப்பூர் மாநகரில் 3 நாட்கள் முழு ஊரடங்கு: காய்கறி, இறைச்சி, மீன் வாங்குவது எப்படி? - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2020 5:00 AM IST (Updated: 25 April 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அன்றைய நாட்களில் காய்கறி, இறைச்சி, மீன் எவ்வாறு வாங்கலாம் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருப்பூர், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நகர்ப்புறங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்பட உள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 28-ந் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்படும். மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளிலும் 33 சதவீத பணியாளர்களுடன் பணியாற்றுவது, அம்மா உணவகங்கள், ஏ.டி.எம். மையங்கள் செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும். தொண்டு நிறுவனத்தினர், பிறஅமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களின் உரிய அனுமதியுடன் இயங்கலாம். மாநகராட்சி பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள், அனுமதிகள் தொடரும்.

திருப்பூர் மாநகரில் இதுநாள் வரையில் இயங்கி வந்த எந்தவித தற்காலிக காய்கறி சந்தைகளான உழவர் சந்தை, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒழுங்குமுறை விற்பனை கூடம், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லுரி, பிற தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை முதல் 28-ந் தேதி வரை செயல்படாது. மளிகை கடைகளும் செயல் படாது.

திருப்பூர் தெற்கு தாலுகா பகுதியில் உள்ள தென்னம்பாளையம் காய்கறி சந்தை மட்டும் மொத்த, சில்லறை காய்கறி விற்பனையாளர்களுக்காக மட்டும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படும். இங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மொத்த, சில்லறை வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மொத்த, சில்லறை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கைவண்டி மற்றும் தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்யப்படும். மேற்கண்ட 3 நாட்களும் இறைச்சிக்கடைகளில் பொதுமக்களுக்கு நேரடி விற்பனை இல்லை. தொலைபேசி ஆர்டரின் பேரில் வீட்டுக்கு டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும்.மீன் விற்பனையும் தள்ளுவண்டி மூலமாக அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படும். தேவையின்றி யார் வெளியே வந்தாலும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story