சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சாலைகளில் சென்ற பொதுமக்கள்: போலீசார் எச்சரித்து அனுப்பினர்


சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சாலைகளில் சென்ற பொதுமக்கள்: போலீசார் எச்சரித்து அனுப்பினர்
x
தினத்தந்தி 24 April 2020 11:15 PM GMT (Updated: 24 April 2020 8:29 PM GMT)

கிருஷ்ணகிரியில் அரசு உத்தரவை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சாலைகளில் கூட்டமாக சென்ற பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கிருஷ்ணகிரி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். அதே போல 26 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஆனால் இதை மதிக்காமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் செல்கிறார்கள். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் நேற்று காலையில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், ஒரு மோட்டார்சைக்கிளில் ஒருவர் தான் பயணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதை எல்லாம் பொதுமக்கள் கண்டு கொள்ளாமல் கூட்டமாக செல்வதை காண முடிந்தது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் நேற்று காலை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக சென்றவர்களை கண்ட போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள். அந்த நேரம் வாலிபர் ஒருவர் சைக்கிளில் முக கவசம் எதுவும் அணியாமல் வந்தார். அவரை பிடித்த போலீசார் அந்த வாலிபரை “கவனித்து” அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தமிழ்நாட்டிலேயே கொரோனா வைரசால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் கிருஷ்ணகிரியும் ஒன்று தான். இதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அரசின் உத்தரவுகளை மதித்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆனால் பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story